பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் நிறைந்த நிலையில் இரண்டு நாளில் எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் 3 கோடியே 81 லட்சத்தை தாண்டியது.
தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். இதையடுத்து பழனிக்கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் இரண்டு நாட்களாக உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்படுகிறது.
இதில் இரண்டு நாளில் பக்தர்களின் காணிக்கை வரவு மொத்தம் 3 கோடியே 81 இலட்சத்து 86 ஆயிரத்து 614 ரூபாய் கிடைத்தது. வெளிநாட்டு கரன்சிகள் 729 நோட்டுகள் கிடைத்துள்ளது.
உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக தங்கம் 1,893 கிராமும், வெள்ளி 11979 கிராமும் கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி மற்றும் பலர் உடனிருந்தனர்.