திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றம்
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி பிரமோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
108 திவ்ய தேசங்களில் பாண்டிய நாட்டில் உள்ள 18-ல் முதன்மையானது நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலாகும். நம்மாழ்வார், திருமழிசைபிரான், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்கள் பாடப்பட்ட திருத்தலமாகும்.
இக்கோயிலில் நின்ற நம்பி (அழகிய நம்பிராயர்), வீற்றிருந்த நம்பிக பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என ஐந்து நம்பிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவும் ஒன்றாகும்.
ஆண்டுதோறும் நடக்கும் இத்திருவிழா இந்த ஆண்டு இன்று (15ம் தேதி) திருக்குறுங்குடி ராமானுஜர் ஜீயா சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேக அலங்கார தீபாராதனை பூஜை நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11 நாட்கள் நடக்கும் திருவிழாவில் வரும் 24ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.