in

ராமேஸ்வரம் இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து

ராமேஸ்வரம் இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து

 

ராமேஸ்வரம் முதல் இலங்கை தலைமன்னார் வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து துவக்கப்பட உள்ளதால் அதற்கான இடம் ஆய்வு செய்யப்படுகிறது என தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் வள்ளலார் தெரிவித்தார்.

தனுஷ்கோடி முதல் இலங்கை தலைமன்னார் வரை 1914 முதல் 1964 வரை கப்பல் போக்குவரத்து இருந்தது. 1964ல் தனுஷ்கோடியில் வீசிய புயலுக்கு பிறகு அது நிறுத்தப்பட்டது. அதன் பிறகு 1969 முதல் 1984 வரை ராமேஸ்வரம் முதல் இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து நடந்தது.

இலங்கையில் ராணுவம், விடுதலைப்புலிகள் இடையே போர் தீவிரமடைந்ததால் பாதுகாப்பு கருதி 1984 முதல் கப்பல் போக்குவரத்தை மத்திய அரசு நிறுத்தியது. 41 ஆண்டுகளாக கப்பல் போக்குவரத்து முடங்கிய நிலையில் மீண்டும் துவக்க தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது.

இதற்கான இடத்தை ஆய்வு செய்ய நேற்று தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் வள்ளலார் தலைமையில் அதிகாரிகள் ராமேஸ்வரம் வந்தனர். இவர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை, தனுஷ்கோடி கடற்கரை, ராமேஸ்வரம் அருகே வில்லுாண்டி தீர்த்தம் கடற்கரை, குந்துகால் கடற்கரை ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர்

அதன் பின் வள்ளலார் கூறியதாவது:

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தனியாகவும், மேலும் தனுஷ்கோடி, அக்னி தீர்த்தம், பாம்பன் குந்துகால், தங்கச்சிமடம் வில்லுாண்டி தீர்த்தம், மன்னார் வளைகுடா முள்ளிமனை தீவு உள்ளிட்ட பகுதிகளை இணைத்து சுற்றுலா பயணிகளுக்கு தனியாக உள்ளூர் கப்பல் போக்குவரத்தும் துவக்கப்பட உள்ளது.

இதேபோல் திருச்செந்துார் முதல் தனுஷ்கோடி வரை சுற்றுலா கப்பல் போக்குவரத்து துவக்கப்பட உள்ளது.

இதனால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் பெரிதும் பயனடைவார்கள். சுற்றுலா மற்றும் இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து துவக்குவதற்கான இடங்களை ஆய்வு செய்துள்ளோம்.

மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறை அனுமதி கிடைத்ததும் பயணிகள் கப்பல் நிறுத்துவதற்கான பாலம் கட்டும் பணி துவங்கும் என்றார்.

What do you think?

ஐயப்ப சுவாமி குறித்து அவதூறாக பாடல் பாடிய பாடகி இசைவாணி மீது நடவடிக்கை

மழையால் வெளியேறும் உபரிநீரினால் செட்டிபட்டு படுகையனை நிரம்பி வழிகிறது