பழனி வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை கடத்திய நபர்கள் கைது
பழனி அடுத்த பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமு , மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராமு தேன் சேகரிப்பிற்காக அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று வருவது வழக்கம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வனப்பகுதிக்கு ராமு சென்ற போது அடர்ந்த வனப்பகுதிக்குள் இறந்த யானை ஒன்று கிடைத்துள்ளது.
யானை இறந்ததை வனத்துறையிடம் தெரிவிக்க வேண்டிய ராமு அதனை மறைத்து பணத்திற்கு ஆசைப்பட்டு யானையின் தந்தத்தை எடுத்து வந்து வீட்டில் வைத்துள்ளார்.
ஒரு மாதமாக யானை தந்தத்தை யாரிடம் விற்பது என்பது தெரியாமல் ராமு வீட்டில் வைத்திருந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. ராமுவிடம் யானை தந்தம் இருப்பதை கூறி அதனை விற்பனை செய்ய உதவுமாறு சோமசுந்தரத்திடம் உதவி கேட்டுள்ளார்.
சோமசுந்தரம் யானை தந்தத்தை விற்பனை செய்ய மேலும் தனக்குத் தெரிந்த வயலூரை சேர்ந்த கணேசன் என்பவரை தொடர்பு கொண்டு உள்ளார். பல இடங்களில் யானைத் தந்தத்தை விற்பனை செய்ய முயன்றுள்ளனர். இந்த நிலையில் யானை தந்தத்தை விற்பனை செய்வது தொடர்பாக தமிழ்நாடு வன மற்றும் வன உயிரினங்கள் குற்றத் தடுப்பு பிரிவு தனிபிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அறிந்து கொண்ட வனத்துறையினர் கணேசன் மற்றும் சோமசுந்தரத்தை தொடர்பு கொண்டு யானை தந்தம் வாங்குபவர்கள் போல நடித்து பேரம் பேசியுள்ளனர். அப்போது ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்தால் இரண்டு தந்துங்களை தருவதாக வனத்துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் மாவட்ட உதவி வன அலுவலர்கள் சக்திவேல் மற்றும் நர்மதா ஆலோசனையின் பேரில் வனத்துறையினர் யானை தந்தத்துடன் கன்னிவாடிக்கு கணேசன் மற்றும் சோமசுந்தரத்தை வர வலைத்த வனத்துறையினர் யானை தந்தத்துடன் கைது செய்தனர். வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் யானை தந்தம் பழனி வனப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது எனவும், பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்த ராமு யானை தந்தத்தை எடுத்து வந்து விற்பனை செய்ய இயன்றதும் தெரியவந்தது, பழனிக்கு வந்த வனத்துறையினர் ராமுவை கைது செய்து யானை தந்தம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை அறிய வனப்பகுதிக்குள் ராமுவை அழைத்துச் சென்றனர்.
அப்போது அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை இறந்து கிடந்ததற்கான தடயங்களும் எலும்புக்கூடுகளும் கிடந்தது. ராமு கூறியது உண்மை என்பதை அறிந்த வனத்துறையினர் மூவரையும் கைது , இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.