in Tirunelveli
மாஞ்சோலை தேயிலை தோட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்கள் அளித்த மனு
மாஞ்சோலை தேயிலை தோட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்கள் அளித்த மனு
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மாஞ்சோலை எஸ்டேட் தொடர்பாக பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் பின்வரும் விபரங்களை அவர்களிடம் தெரிவித்தார்.
மாஞ்சோலை எஸ்டேட்டில் தற்போது 32 மேற்பார்வையாளர்கள், 504 தொழிலாளர்கள் என 536 பேர் பணிபுரிந்து வருகின்றனர். மாஞ்சோலையில் இயங்கி வரும் BBTC தேயிலை கம்பெனி நிர்வாகத்தினர் தமிழ்நாடு அரசுடன் மேற்கொண்ட 99 ஆண்டு கால குத்தகை ஒப்பந்தம் 11.02.2028 அன்றுடன் முடிவடைகிறது.
குத்தகை காலம் 2028 உடன் முடிவடைய உள்ளதாலும், மாஞ்சோலை எஸ்டேட் அமைந்துள்ள நிலப்பகுதி ஒதுக்கப்பட்ட காடுகளாக (Reserved Forest) அறிவிக்கப்பட்டது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவின்படியும் BBTC நிர்வாகத்தினர் 5 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியேறும் திட்டத்தை அளித்திடவும் அது முதல் படிப்படியாக வெளியேறவும் மாண்புமிகு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தினை அறிவித்துள்ளதாக மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கடந்த 3 மாதங்களில் தொழிலாளர் நலத்துறை சார்பில் 5 முறை தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்களின் சட்ட பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அப்பகுதியில் வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து தொழிலாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்டேட் பணியில் இருந்து வெளியேற விரும்பும் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான வசதிகளும், வீடுகளற்ற தொழிலாளர்களுக்கு பட்டா / வீடுகளும் வழங்கிட உரிய உதவிகள் செய்திட ஏற்கனவே அரசின் அறிவுரைகள் பெறப்பட்டுள்ளது எனவும், பிற கோரிக்கைகள் தொடர்பாக அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பி வைக்கப்படும் எனவும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் அனைத்து கட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள மனு அரசின் பரிசீலனைக்கு உரிய முறையில் அனுப்பி வைக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உறுதியளித்தார்.