சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரில் கொள்ளையனை சுட்டுப் பிடித்த போலீசார்
சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரில் கொள்ளையனை சுட்டுப் பிடித்த போலீசார். காவலரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றபோது சுட்டுப் பிடிப்பு.
சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் வீட்டில் நேற்று முன்தினம் 20 பவுன் நகை திருடு போனது. இந்த சம்பவம் குறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய பிரபல கொள்ளையனான கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தாலுகாவை சேர்ந்த ஸ்டீபன்(35) என்பவரை நேற்று இரவு அண்ணாமலைநகர் போலீசார் கைது செய்தனர். பின்னர் இன்று காலை கைது செய்யப்பட்ட கொள்ளையன் அளித்த தகவலின் பேரில் போலீசார் சிதம்பரம் அருகே உள்ள சித்தலப்பாடி கிராமத்திற்கு மறைத்து வைத்திருந்த பொருளை எடுக்க அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது கொள்ளையன் ஸ்டீபன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர் ஞானப்பிரகாசத்தை கிழித்து விட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தற்காப்புக்காக கொள்ளையனை தனது கைத்துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார்.
இதையடுத்து சுடப்பட்ட கொள்ளையன் மற்றும் காயமடைந்த காவலர்கள் இருவரும் அண்ணாமலைநகரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினார்.
போலீசாரால் சுடப்பட்டு பிடிக்கப்பட்ட கொள்ளையன் ஸ்டீபன் மீது கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.