நாகை நகரத்தில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வீடுகள் தோறும் கண்டன போஸ்டர்கள்
தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் இடத்திற்கு பட்டா வழங்க கோரியும், தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளை போலி பத்திரம் மூலம் அபகரிக்கும் அதிகார வர்க்கத்துக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை கண்டித்தும் நாகை நகரத்தில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம். வீடுகள் தோறும் கண்டன போஸ்டர்கள் ஒட்டி எதிர்ப்பு:
நாகப்பட்டினம் நகர மையப் பகுதியில் அமைந்திருக்கும், 25 ஆவது வார்டு செம்மாரக்கடைத்தெரு வடக்கு சந்து பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இதில் 25 குடும்பங்கள் ஐந்து தலைமுறைகளாக 100 வருடங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடியிருக்கும் மக்களில் பல குடும்பங்கள் தாழ்த்தப்பட்ட பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களாகவும், படிப்பறிவு அதிகம் இல்லாதவராகவும் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தும் ஏழை மக்களே அதிகம் வசிக்கின்றனர்.
இந்த சூழ்நிலையை சாதமாக பயன்படுத்திக் கொண்ட அப்பகுதியை ஒட்டி உள்ள சிலர், ஏழை மக்கள் குடியிருக்கும் பகுதிகளை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தங்களுடைய பண பலத்தால் அவர்களின் பெயரில் போலி பத்திரங்கள் தயார் செய்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது இதனால் , கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக அப்பகுதி மக்களை அடியாட்களை வைத்து காலி செய்ய முயற்சி செய்தனர் என்றும். இந்த நிலையில் அப்பகுதிவாசிகள் ஒன்றிணைந்து முதல்வர் முதல் அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்ததின் பேரில் இத்தனை ஆண்டுகள் பிரச்சனை பண்ண வில்லை என்றும் ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக சிலர் வந்து போலி பத்திரங்கள் மூலம் இவர்கள் வசிக்கும் நகரின் முக்கிய பகுதியான வீடுகளை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாகவும். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும், தங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு கூரை வரி, தண்ணீர் வரி, மின்சார கட்டணம் போன்றவைகளை அரசுக்கு முறையாக சுமார் 50 வருடங்களாக செலுத்திக் கொண்டிருந்தாலும், போலி பத்திரம் தயாரித்தவர்களது பண பலத்தாலும் ஆள் பலத்தாலும், சில அரசு அதிகாரிகளின் துணையோடு வீடுகளை காலி செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
புகார் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த மக்கள் ஆத்திரமடைந்து வீடுகள் தோறும் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கண்டன போஸ்டர்களை ஒட்டியும் தேர்தலில் பகுதி மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டோம் என்றும், இந்த தேர்தல் மட்டுமல்லாது இனி வரும் சட்டமன்ற தேர்தல் வாக்களிப்பது இல்லை என்றும், தங்களுடைய ஆதார் அட்டை ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.