மதுரையில் சர்வதேச ஆண்கள் தின விழாவை உற்சாகமாக ஒரே நிற புத்தாடை அணிந்து ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்து கொண்டாடிய மின்வாரிய ஊழியர்கள்
பெண் அதிகாரிகள், பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து பெற்றுக்கொண்ட ஆண் பணியாளர்கள்
ஆண்களின் தியாகம் பேசப்படாது, ஆண்கள் பாடப்படாத ஹீரோக்கள் – ஆண்கள் தினம் கொண்டாடிய பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பெண் அதிகாரி.
விலங்குகள் தினம் போன்ற வரிசையில் ஆண்கள் தினமும் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கு நிகராக ஆண்கள் இருக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளதால் ஆண்கள் தினத்தை கொண்டாடிவருகிறோம், ஒரே சீருடையில் கொண்டாடுவது பள்ளிப்பருவ மகிழ்ச்சியை தருகிறது என பணியாளர்கள் பேட்டி.
நாடு முழுவதும் ஆண்டுதோறும் மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுவதோடு அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவிப்பர். ஆனால் பெண்கள் தினம் போல கொண்டாடப்படும் ஆண்கள் தினமும் கண்டுகொள்ளப்படாமல் இருந்த நிலையில் தற்போது ஆண்கள் தினமும் கொண்டாட்டங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதன்படி தேசிய ஆண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ஆம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு மதுரை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் , அலுவலர்கள் பணியாளர்கள் ஒரே மாதிரியான வண்ணத்தில் புத்தாடை அணிந்துவந்து உற்சாகமாக கொண்டாடினர்
அப்போது ஒருவருக்கு ஒருவர் ஆண்கள் தின வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு ஆரத் தழுவியும், முத்தமிட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
இதனைத் தொடர்ந்து அலுவலகத்தில் பணியாற்றிய பெண் அதிகாரிகளுக்கு, ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கியதோடு மதிய உணவு வகைகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்.
அப்போது பெண் உயரதிகாரியிடம் ஆண் பணியாளர்கள் இனிப்பு கொடுத்தபோது ஆண் பெண் இருவரும் தண்டவாளம் போல செயல்பட வேண்டும், பெண்களின் தியாகம் போற்றப்படும், ஆனால் ஆண்களின் தியாகம் பேசப்படாது , பாடப்படாத ஹீரோக்கள் என கூறி வாழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து மின்வாரிய அலுவலகத்தின் முன்பாக நின்று ஒரே மாதிரியான கைத்தறி ஆடைகளை அணிந்து குழுப்புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.