பிரேமாலதா விஜயகாந்த் சிவகாசியில் பேச்சு
அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் கொட்டும் முரசு சின்னத்தில் போட்டியிடுகின்றார் .
கடந்த 10 நாட்களாக முன்னாள் அமைச்சர் கே.டி .ராஜேந்திரபாலாஜி உடன் அவர் தொகுதி முழுவதிலும் தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வந்தார். இந்நிலையில் சிவகாசி பகுதியில் தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது மகன் விஜயபிரபாகரனுக்கு ஆதரவு கேட்டு பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசியது.
இந்த தொகுதியில் கொட்டும் முரசு சின்னத்தில் விஜய பிரபாகரன் போட்டியிடுகின்றார். அவர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற நீங்கள் உதவி செய்ய வேண்டும். பிரபாகரன் விஜய பிரபாகரன் வேறு யாருமில்லை இந்த மண்ணின் மைந்தன். உங்கள் அண்ணன் மகன். உங்கள் அண்ணன் மகனுக்கு நீங்கள் பெருவாரியான வாக்குகளை அளிக்க வேண்டும். 32 வயதில் படித்து முடித்துவிட்டு எத்தனையோ கனவுகள் இருந்தாலும் அதை தூக்கி எறிந்து விட்டு தந்தையின் வழியில் மக்கள் சேவை செய்ய இந்த தொகுதியில் அவர் போட்டியிடுகின்றார். உங்கள் எல்லாருக்கும் தெரியும் தம்பிக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை. இந்த விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் இந்த தொகுதி மக்களின் தலைமையில் தான் அவருக்கு திருமணம் நடக்கும் .
கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றேன். இந்த தொகுதியில் விஜய பிரபாகரன் வெற்றி பெற்றவுடன் அவர் பல நல்ல திட்டங்களை இந்த தொகுதியில் அறிவித்து செயல்படுத்த உள்ளார். அதில் சிலவற்றை என்னிடம் கூறினார். அதை நான் உங்களிடம் கூறுகின்றேன். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் கேப்டன் பிறந்தநாள் அன்று 60 பெண்களை தேர்வு செய்து பெண்கள் நாட்டின் கண்கள் திட்டத்தின் மூலம் எங்களது சொந்த நிதியிலிருந்து அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க உள்ளார். ஆண்டுதோறும் 6 லட்சம் வீதம் 5 வருடத்தில் 30 லட்சம் ரூபாய் வரை பெண்களுக்கு நிதி உதவி வழங்க உள்ளார்.
தொகுதி முழுவதிலும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் தொடங்கப்படும். இலவச தையல் பள்ளிகள் உருவாக்கப்படும். இலவச நீட் கோச்சிங் சென்டர் உருவாக்கப்படும் . படித்த படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு இலவச தையல் மிஷின்கள் வாங்கி கொடுத்து அவர்கள் வாழ்வாதாரம் உயர நடவடிக்கை எடுப்போம். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாளாக உயர்த்தவும் கூலித்தொகையை ரூ.500 ஆக அதிகரிக்கவும் விஜய பிரபாகரன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைப்பார். தொகுதி முழுவதிலும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பார்.
இந்த மாவட்டத்தின் முக்கிய தொழிலான பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள் நசிந்து வருகின்றது. அதில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க விஜய பிரபாகரன் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவார். விஜய பிரபாகரன் வயதில் சின்னவர் என்று நினைக்காதீர்கள். அவர் நல்ல அறிவாளி உலகம் முழுவதிலும் சுற்றி வந்துள்ளார். பல்வேறு மொழிகளை பேசும் திறமை கொண்டவர். பாராளுமன்றத்தில் உங்கள் பிரச்சனைகளை எழுப்பி அதற்கு தீர்வு காணும் வல்லமை அவரிடம் உள்ளது. ஏற்கனவே இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருக்கின்றார்கள். நாங்கள் அப்படி இருக்க மாட்டோம் .கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம்.
விஜய பிரபாகரன் குணத்திலும் பழகுவதிலும் கேப்டன் மறு உருவம். 34 வருடம் கேப்டனுக்கு மனைவியாக வாழ்ந்தும் அவருக்கு தாயாக இருந்தும் சேவை செய்திருக்கின்றேன். கேப்டன் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரது ஆசியால்தான் நான் இயங்கி வருகிறேன். இவர் அவர் பேசினார். பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தேமுதிக மாவட்ட செயலாளர் காஜாசெரீப் உடன் இருந்தனர்.