அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்
அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் கைதை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாக டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியின் எக்ஸ் தள பதிவில், “தேர்தல் காரணமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இவ்வாறு குறிவைப்பது முற்றிலும் தவறானது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது.
உங்கள் விமர்சகர்களை தேர்தல் போரில் எதிர்த்துப் போராடுங்கள், அவர்களைத் துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள், நிச்சயமாக அவர்களின் கொள்கைகள் மற்றும் வேலை செய்யும் பாணியைத் தாக்குங்கள், இதுதான் ஜனநாயகம்.
நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும், தலைவர்களும் இரவு பகலாக ED, CBI, IT என அழுத்தத்தில் உள்ளனர், ஏற்கனவே ஒரு முதல்வர் சிறையில், இப்போது மற்றொரு முதல்வரையும் சிறையில் வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்தியாவின் சுதந்திர வரலாற்றில் இது போன்ற வெட்கக்கேடான காட்சி முதன்முறையாகக் காணப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.