சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம். பேராசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் செயலில் பல்கலைக்கழக நிர்வாகம் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு. தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி தங்களை அரசுக்கு எதிராக திருப்பும் முயற்சி என பேட்டி
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு ஏற்ற பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு தான் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பேராசிரியர்கள் பலரின் பதவி உயர்வை பறிக்கும் வகையில் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்
இதைக் கண்டித்து இன்று பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோவில் முன்பு ஆசிரியர் சங்கத்தினர் ஒன்று திரண்டு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் கூறியதாவது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2012 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதிச் சிக்கலுக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து 2019 ஆம் ஆண்டில்தான் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அந்தப் பதவி உயர்வு கூட தகுதி உடையவர்களுக்கு முன்தேதியிட்டு வழங்காமல், 2019 ஆம் ஆண்டில் இருந்துதான் பணப்பலன்கள் வழங்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு ஆசிரியருக்கும் சுமார் ரூ 10 லட்சம் வரை நிதி இழப்பு ஏற்பட்டது. இருந்தாலும் அன்றைய துணைவேந்தர் கேட்டுக் கொண்டதால் அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.
ஆனால் தற்போதுள்ள துணைவேந்தர், பேராசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் வகையில் ஆட்சி மன்ற குழுவிற்கு ஒரு தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறார். அந்தத் தீர்மானத்தை முன்மொழியக் கூடாது என்பது எங்களது கோரிக்கை. பதவி உயர்வு பெற்ற பேராசிரியர்களுக்கு இந்த ஆட்சி மன்ற குழுவில் எந்த பாதிப்பும் வரக்கூடாது. அதே நேரத்தில் பதவி உயர்வு பெறாமல் இருக்கும் பேராசிரியர்களுக்கும் தேர்வுக் குழுவை நடத்தி பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை.
தற்போதைய துணைவேந்தர் ஆசிரியர்களுக்கு எதிராக செயல்பட்டு தமிழக அரசுக்கு எதிராக எங்களை திருப்ப நினைக்கும் முயற்சிதான் இது. துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 3 மாதங்களே இருக்கிறது. பதவி முடிவதற்கு 3 மாதங்கள் இருக்கும்போது எந்தவித கொள்கை முடிவையும் எடுக்கக்கூடாது என்பது விதி. அதனால் அவருக்கு தார்மீக அடிப்படையில் உரிமை இல்லை என கூறினார்.