புதுச்சேரியில் 10 பேர் கொண்ட விபசார கும்பல் அதிரடி கைது
புதுச்சேரியில் 10 பேர் கொண்ட விபசார கும்பல் அதிரடி கைது. இரண்டு இடங்களில் சோதனையில் 8 அழகிகள் மீட்பு.
புதுச்சேரி பாரதி வீதியிலுள்ள ஸ்பாவில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கும் சட்டம்-ஒழுங்கு சீனியர் எஸ்பி சுவாதி சிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கிழக்கு எஸ்பி லட்சுமி சௌஜானியா மேற்பார்வையில் பெரியகடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், எஸ்ஐக்கள் முருகன் தலைமையிலான தனிப்படையினர், சிறப்பு அதிரடிப்படையுடன் சேர்ந்து அதிரடியாக அங்கு சோதனை நடத்தினர்.
அப்போது ஸ்பாவில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 6 அழகிகளை மீட்ட போலீசார், ஸ்பாவை நடத்திய உரிமையாளரான சென்னை, ஆலந்தூர், தபாதர் தெருவைச் சேர்ந்த சந்திரகுமார் (35), விபசார தொழிலுக்கு உடந்தையாக இருந்த புதுச்சேரி, லாஸ்பேட்டை, கைலாஷ் நகரில் வசிக்கும் மணிகண்டன் மனைவி லதா (33) ஆகியோரை சுற்றிவளைத்த போலீசார் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஸ்டமர்களை விபசாரத்துக்கு அழைத்து வந்தது கடலூர், திருப்பாப்புலியூர், இந்திரா நகர் ஏசி மெக்கானிக் கார்த்திகேயன் (23), புதுச்சேரி, தேங்காய்திட்டு, புதுநகர் ஹெல்பர் கார்த்திகேயன் (25), முதலியார்பேட்டை, மகா காளியம்மன் கோயில் தெரு டிரைவர் பரத் (26) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களையும் உடனே கைது செய்த போலீசார், சோதனை நடத்தப்பட்ட ஸ்பாவில் இருந்து 5 செல்போன்கள், 2 பாக்கெட் ஆணுறைகள் மற்றும் பணம் பரிவர்த்தனை செய்யும் இயந்திரம் ஆகியவற்றை கைப்பற்றினர்.
பிடிபட்ட ஸ்பா உரிமையாளர் உள்ளிட்ட 5 பேரையும் விபசார வழக்கில் கைது செய்த போலீசார் அவர்களை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இவர்களில் சந்திரகுமார், லதா, பரத் ஆகியோர் மீது பெரியகடை, கோரிமேடு காவல் சரகத்தில் இதேபோல் விபசார வழக்கு ஏற்கனவே நிலுவையில் இருப்பதும் அம்பலமானது. மீட்கப்பட்ட 6 அழகிகளும் பாதுகாப்பாக காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டனர். சிறப்பாக செயல்பட்டு விபசார கும்பலை கைது செய்த போலீசாரை சீனியர் எஸ்பி சுவாதிசிங் பாராட்டினார்.
இதேபோல் முதலியார்பேட்டையில் 5 பேர் கொண்ட விபசார கும்பலை போலீசார்கைது செய்துள்ளர். அங்குள்ள உப்பளம் ரோட்டில் உள்ள விடுதியில் அழகிகளை அடைத்துவைத்து விபசாரம் நடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் தெற்கு எஸ்பி பக்தவச்சலம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் நேற்றிரவு அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 2 வெளிமாநில அழகிகளை பத்திரமாக மீட்ட போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்களை விபசாரத்துக்கு அழைத்துவந்தது புதுச்சேரி, சண்முகாபுரம் பாலாஜி (35) என்பதும், இவர் இருவரையும் அழைத்துவந்து வாணரப்பேட்டை பிரபல ரவுடி அய்யப்பனிடம் ஒப்படைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் வில்லியனூர், ஆரியபாளையம் அய்யப்பன் என்ற மணிகண்டன் (37) உதவியுடன் ஆன்லைன் மூலமாக அழகிகளின் புகைப்படம் அனுப்பி கஸ்டமர்களை மேற்கண்ட விடுதிக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து மேற்கண்ட இருவரையும் கைது செய்த போலீசார், விடுதியின் மேலாளரான கோட்டகுப்பம், சின்னமுதலியார் சாவடியைச் சேர்ந்த முத்தமிழன் (30), கஸ்டமர்களாக விபசாரத்தில் ஈடுபட வந்த முதலியார்பேட்டை உப்பளம், அவ்வை நகர் தினேஷ் (38), ரெட்டியார்பாளையம், சதாசாய் நகர் லோகேஷ் (25) உள்ளிட்ட 3 பேரும் பிடிபட்டனர். சோதனை நடத்தப்பட்ட விடுதியில் இருந்து செல்போன்கள், ஆணுறை பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இவர்கள் மீது விபசார தடுப்பு பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்த போலீசார் 5 பேரையும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட வெளிமாநில அழகிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் அழகிகளை விலைக்கு வாங்கி விபசார தொழிலை நடத்திய ரவுடியான வாணரப்பேட்டை அய்யப்பனை தனிப்படை வலைவீசி தேடி வருகிறது…