மரங்களை வெட்டும் ஏலத்தில் முறைகேடு அதிகாரிகளை கண்டித்து போராட்டம்
சிவகங்கை அருகே சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை வெட்டும் ஏலத்தில், அரசு அதிகாரிகளும், ஆளுங்கட்சியினரும், சிண்டிகேட் அமைத்து, அரசிற்கு இழப்பு ஏற்படுவதை கண்டித்து ஒப்பந்ததாரர்கள் போராட்டம்.
சிவகங்கை சஞ்சய் நகரிலிருந்து மலம்பட்டி வரையிலான 12 கி.மீ. தூரமுள்ள மாநில நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்க திட்டத்திற்கு கடந்த மாதம் பூமி பூஜை போடப்பட்டது.
விரிவாக்க பணிக்காக இச்சாலையின் இரு புறங்களிலும் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஒரு பகுதி நடைபெற்று முடிந்ததுள்ளது. இப்பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முறையாக முன்னறிவிப்பு செய்யாமல் ஆளுங்கட்சிக்கு சாதமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைதுறை அலுவலகத்தில் இச்சாலையில் உள்ள மற்றொரு பகுதிக்கு மரங்களை வெட்டுவதற்கான ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கான ஏலத்தில் கலந்து கொள்ள வந்த ஒப்பந்ததாரர்கள் ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் ஏலம் நடைபெறுவதை அதிகாரிகள் ஒத்திவைத்தனர். மரங்களை ஆற்றும் பணிக்கு குறைந்த தொகையில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்பட்டதால் அரசிற்கு 30 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என குற்றம் சாட்டிய ஒப்பந்ததாரர்கள் முறையாக ஏலம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசுக்கு நிதி இழப்பு ஏற்படும் வகையில் செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.