மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு, டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணி மீ.த.பாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில்,மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்தில் 5,000 ஏக்கர் டங்ஸ்டன் சுரங்கத்திட்ட ஏலத்தை மத்திய அரசு இரத்து செய்ய வலியுறுத்தியும், டங்ஸ்டன் திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதில், சுற்றுச் சூழல் பாதுகாப்பு சமூக ஆர்வலர்கள், பல்வேறு இயக்கங்கள், பொது மக்கள், மேலூர் வட்டார விவசாயிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்திலும் இது தொடர்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.