தஞ்சாவூர் ராஜராஜசோழன் மணிமண்டபம் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
தஞ்சாவூர் ராஜராஜசோழன் மணிமண்டபம் 3.5 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் துவங்கி ஒர் ஆண்டை கடந்த நிலையில், கோடை விடுமுறைக்குள் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூரில் 1995-ம் ஆண்டு 8-வது உலகதமிழ் மாநாடு நடைபெற்றபோது, அப்போதைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உத்தரவின் பேரில், சோழ மன்னர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தஞ்சாவூர்- புதுக்கோட்டை சாலையில் 3.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.1.60 கோடியில் ராஜராஜ சோழன் மணிமண்டபம் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொண்டாலும், நாளடைவில் பொலிவிழந்தது.
இதையடுத்து, இந்த மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என பல்வேறு சமூக ஆர்வலர்கள், தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, இந்த மணிமண்டபத்தை ரூ.3.5 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணி 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. புல் தரைகள், புதிய நடைபாதை வசதி, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று, சிறுவர்களுக்கான ரயில், ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் 95% சதவீத முடிவடைந்துவிட்டது என கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தெரிவிக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் திறக்கப்படும் எனவும் தஞ்சை மக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் இதுவரையிலும் பணிகள் நடந்து வருகிறது. ஏப்ரல் 15 தேதிக்கு பிறகு கோடை விடுமுறை துவங்க இருக்கும் நிலையில் ராஜராஜ சோழன் மணிமண்டபம் புதுப்பிக்கும் பணிகளை விரைவாக முடித்து திறக்கப்பட வேண்டும் என தஞ்சை மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.