புதுச்சேரி அகத்தியர்கோட்டம் பகுதியில் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட 15 அடி உயர ஸ்ரீ எம வராஹி அம்மன், ஸ்ரீ காலபைரவர் சுவாமிகளுக்கு நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் முத்தரையர்பாளையம் அகத்தியர் கோட்டத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வனபத்ரகாளியம்மன், ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன், ஸ்ரீ மார்க்கன்னியம்மன் ஆலயத்தில் 21 அடி உயர காளியம்மன் பிரணவபுரீஸ்வரர், வனவராகி, பிரத்யங்கர தேவி, வக்கிரகாளியம்மன் ஆலயத்தின் முதலாம் ஆண்டு விழா மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 15 அடி உயர ஸ்ரீ எம வராஹி அம்மன், ஸ்ரீ காலபைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது.
நேற்று வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை, இரண்டாம் கால யாக பூஜை நடத்தப்பட்டன. இன்று காலை பூர்ணாஹூதி தீபாரதனை, யாத்ரதானம், கடம் புறப்பாடு நடத்தப்பட்டு விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
யாக சாலையிலிருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 15 அடி உயர ஸ்ரீ எம வராஹி அம்மன் மற்றும் ஸ்ரீ கால பைரவர் சுவாமி சிலைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அப்பகுதியை சுற்றியுள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகி விஜயபாரதி, அஞ்சாலாட்சி, சுகுந்தன் மற்றும் அகத்தியர் கோட்டம் பகுதியை சேர்ந்த பாண்டியன், மனோபாலன், ராஜா, ராஜி மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்தனர்.