புதுச்சேரி கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் புதுச்சேரி நகராட்சி ஆணையர்
புதுச்சேரியில் அறிவிப்பு கொடுக்கப்பட்டு வாரம் ஒரு வீதி என ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். உத்தரவு மீறி அகற்றாத கடைகள் சீல் வைக்கப்படும். மீறினால் குற்ற வழக்கு பதிவு செய்யப்படும். புதுச்சேரி நகராட்சி ஆணையர் பேட்டி.
புதுச்சேரி நகரின் மையமாக காந்திவீதி உள்ளது. காந்திவீதியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தது. கடைக்காரர்கள் கடைக்கு வெளியில் தங்கள் விளம்பர பதாகைகளை வைப்பது, விற்பனை செய்யும் பொருட்களை வைத்தனர்.
சாலையோர வியாபாரிகள் சாலைகளை ஆக்கிரமித்து கடை அமைத்தனர். இதனால் சாலையில் வாகனங்களே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதேபோல நகரத்தின் பிற பகுதிகளிலும் இதேநிலை நீடிக்கிறது.
இதுதொடர்பாக புதுவை நகராட்சிக்கு தொடர் புகார் வந்தது. நகராட்சி ஆணையர் கந்தசாமி கடந்த திங்கள்கிழமை காந்திவீதியில் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களோடு வந்து ஆய்வு செய்தார்.
அப்போது, சாலையோர கடை உரிமையாளர்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே முன்வந்துஅகற்றும்படி அறிவுறுத்தினார். மீண்டும் புதன்கிழமை இன்று ஆக்கிமிப்புகள் அகற்றப்படும் என தெரிவித்திருந்தார்.
இன்று காலை 10.30 மணியளவில் நகராட்சி ஆணையாளர் கந்தசாமி, நகராட்சி ஊழியர்கள், போலீசார், பொக்லைன் எந்திரம், வாகனங்களுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தார். அப்போது வியாபாரிகளே ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி மீண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இதன்பின் அஜந்தா சிக்னல் முதல் சின்னமணிக்கூண்டு வரை அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்ற தொடங்கினர். கடை உரிமையாளர்கள் சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த விளம்பர பதாகைகள், நிழற்குடைகள், சாலையோர கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டது.
காந்திவீதியில் வணிக உரிமம், விதிகள் மீறி செயல்பட்டதாக தற்காலிகமாக பழக்கடையை மூடி சீல் வைத்தனர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இதேபோல புதுவை நகரின் அனைத்து வீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சாலைகளை முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்துபுதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி கூறுகையில்,
புதுச்சேரியின் பெரும்பாலான சாலைகள் அனைத்தும் அகலமாக தான் காணப்படுகிறது. ஆனால் அவற்றின் ஆக்கிரமிப்பு காரணமாக குறுகிவிட்டது. இனி வாரம் ஒரு வீதி என ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். முன்னதாகவே அவர்களுக்கு அறிவிக்கை அளிக்கப்படும். அதன் பிறகும் அகற்றாத கடைகள் சீல் வைக்கப்படும். மீறினால் குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என கூறினார்..