புதுச்சேரி.. கோயில் பால்குடம் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தப்பி ஓடிய 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ருத்ரேஷ் (25). பெரியார் நகர் கங்கையம்மன் கோயில் பால்குடம் ஊர்வலம் இன்று நடைபெற்றது. ஊர்வலம் முடிந்து அபிஷேகத்திற்காக திரளான பக்தர்கள் கோவிலில் திரண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் ருத்ரேசை அவரது தாய் மற்றும் தங்கை கண் எதிரே சரமாரியாக குத்தியது. இதில் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ருத்ரேஷ் துடிதுடித்து இறந்து போனார்.
இது குறித்து தகவல் அறிந்தவுடன் உருளையன்பேட்டை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ருத்ரேசுக்கும், அப்பகுதி சேர்ந்த ஈஸ்வர், கௌதம் கும்பலுக்கும் கஞ்சா விற்பதில் முன்விரோதம் இருந்து வந்ததும், இந்த காரணமாக ருத்ரேஷ் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. தப்பி ஓடிய குற்றவாளிகளை தனிப்படை போலீஸ் தேடி வருகின்றனர்.