in

மேலூர் அருகே அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா

மேலூர் அருகே அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா

 

மேலூர் அருகே அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி இஸ்லாமிய மக்கள் நடத்திய சிறப்பு தொழுகை மற்றும் அன்னதானம்.. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அன்னதானத்தில் பங்கேற்பு…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருங்காலக்குடி கிராமத்தில் அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய பெருமக்கள் இன்று சிறப்பு தொழுகை நடத்தி கறி விருந்து அன்னதானம் வழங்கினர். இதில் சுற்றுவட்டார கிராம பகுதியைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானத்தில் உணவருந்தி சென்றனர்.

மேலூர் அருகே உள்ளது கருங்காலக்குடி கிராமம். இங்கு இந்து மற்றும் இஸ்லாமியர்கள் சரிசமமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு உள்ள அய்யனார் கோவில் திருவிழா வரும் ஞாயிறு மற்றும் திங்கள் (11,12-08-24) கிழமைகளில் நடைபெற உள்ளது. இந்த திருவிழா நல்ல முறையில் நடைபெற வேண்டியும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் ஆண்டுதோறும் திருவிழாவிற்கு முன்பு வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று மதியம் அங்குள்ள மொல்லாமலை பாறையில் அமைந்துள்ள பள்ளிவாசலில் கூடும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி இந்துக்களுக்கு மரியாதை அளித்து அவர்கள் வழிபாடு நடத்திய சர்க்கரையை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்கின்றனர்.

அதனை தொடர்ந்து அங்கு சிறப்பான கறி விருந்து அன்னதானம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று மதியம் மொல்லாமலை அருகே உள்ள மொட்ட பாறையில் அமர்ந்து சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் அதனை தொடர்ந்து சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அன்னதானத்தை நடத்தினர்.

இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்திய சர்க்கரை மற்றும் பேரிச்சம் பழங்கள் வழங்கப்பட்டன. கம்பூர் கருங்காலக்குடி அய்யாபட்டி அலங்கம்பட்டி குன்னாரம்பட்டி மங்களாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர்.

சமூக நல்லிணக்கத்திற்காக தங்களது முன்னோர்கள் கடைபிடித்த இந்த நடைமுறையை பாரம்பரியமாக தாங்களும் பின்பற்றி வருவதாக தெரிவித்த இஸ்லாமியர்கள் கிராமத்தில் தாங்களும் இந்து சமுதாய மக்களும் அண்ணன் தம்பி மாமன் மச்சான்களாக உறவுகளோடு வாழ்ந்து வருவதாக பெருமிதத்தோடு தெரிவித்தனர்.

What do you think?

மாமதுரை விழா டபுள் டக்கர் பேருந்தில் பொதுமக்கள் உற்சாக பயணம்

தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியலின உரிமை கோரி கிறிஸ்தவ மக்கள் களம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது