அமேதியில் ராகுல் காந்தி போட்டி?
உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இப்படியாக ஜூன் 1 வரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த 7 கட்ட தேர்தலிலும் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளுக்குமான தேர்தல் நடைபெறுகிறது.
இதில் பாஜக 75 தொகுதிகளிலும், அதன் NDA கூட்டணி கட்சிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அதே போல I.N.D.I.A கூட்டணி சார்ப்பில் சமாஜ்வாடி கட்சி 62 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1 தொகுதியிலும் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் போட்டியிடும் 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. இன்னும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அமேதி தொகுதியை பொறுத்தவரையில் இதுவரை நடைபெற்ற 16 மக்களவை தேர்தல்களில் 13இல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இரண்டு முறை பாஜகவும், 1 முறை ஜனதா தளம் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என நேரு குடும்பத்தை சேர்ந்தவர்களின் சொந்த தொகுதியாகவே அமேதி பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தி 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று இருந்தார். கடந்த 2019இல் ராகுல் காந்தி , அமேதி மற்றும் கேரளா வயநாடு தொகுதிகளில் களம் கண்டார். இதில் வயநாட்டில் வெற்றியும், அமேதியில் தோல்வியும் கண்டார். அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்று மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். இந்த முறையும் பாஜக வேட்பாளராக ஸ்மிருதி இரானி பாஜக சார்பில் அமேதியில் களமிறங்கி தீவிர பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்.
இப்படி இருக்கும் சூழலில் இன்னும் அமேதி தொகுதி வேட்பாளரை காங்கிரஸ் தலைமை அறிவிக்கவில்லை. அதே போல காங்கிரஸ் கோட்டையாக உள்ள ரேபரேலி தொகுதியில் 2004 முதல் 2019 வரையில் சோனியா காந்தி தான் வென்றுள்ளார். ஆனால் இந்த முறை அவர் மக்களவை அரசியலில் இருந்து ஓய்வு பெற்று ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களை எம்பியாக தேர்வு செய்யப்பட்டு விட்டார். இதனால், அங்கும் இன்னும் வேட்பாளர் யார் என அறிவிக்கவில்லை.
அமேதி மற்றும் ரேபரேலியில் மே 20ஆம் தேதி தான் தேர்தல் நடைபெற உள்ளது. மே 3ஆம் தேதி தான் வேட்புமனுத்தாக்கல் கடைசி திதியாகும். எனவே, கேரளாவில் வரும் ஏப்ரல் 26 இல் தேர்தல் முடிந்த பிறகு, அமேதி தொகுதியில் ராகுல் காந்தியே போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்றும், ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்வார் என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறபடுகிறது.
அமேதி தொகுதி பற்றி ராகுல் காந்தி கூறுகையில், கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு நான் கட்டுப்படுவேன் என கூறினார். அதே நேரம் அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதோரா களமிறங்க அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருவதாகவும், அமேதி மக்கள் ராபர்டை விரும்புவதாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அனால், இச்செயல், பாஜகவினரின் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி என காங்கிரஸ் விமர்சனம் செய்து வருகிறது.
இந்த இரு தொகுதிகளுக்கான குழப்பம் தீர கேரளா மக்களவை தேர்தல் முடிந்த பிறகு காங்கிரஸ் தலைமை மௌனம் கலைத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.