தோல்வி பயத்தால் ரேபரேலியில் களமிறங்கும் ராகுல் மோடி கிண்டல்
தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது. காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்கனவே போட்டியிட்டு வென்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு உள்ளார். அங்கு தேர்தல் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி நிறைவடைந்தது. அதனை அடுத்து 2019ஆம் ஆண்டு தேர்தலை போல இன்னொரு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
ஏற்கனவே ராகுல் காந்தி 2004 முதல் 2014 தேர்தல் வரை வென்று இருந்த அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி இந்த முறை சோனியா காந்தி 2004 ஆம் ஆண்டு முதல் 2019 வரையில் வென்றிருந்த ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு இன்று வேட்புமனுவும் தாக்கல் செய்து விட்டார். கடந்த 2019ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் காந்தி தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி, தான் அதிக முறை வெற்றிபெற்ற அமேதி தொகுதியை விடுத்து வேறு தொகுதியில் போட்டியிடுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பர்தாமானில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசுகையில், அண்மையில் வாக்குப்பதிவு முடிந்த வயநாட்டில் தோல்வி பயம் காரணமாக தான் காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி தற்போது வேறு இடத்தில் நிற்கிறார் என்றும், இப்படி நடக்கும் என நான் ஏற்கனவே கூறியிருந்தேன் எனவும் ராகுல் காந்தி கூறினார்.
மேலும் பேசிய பிரதமர் மோடி, ‘ ரேபரேலி தொகுதி காங்கிரஸுக்கு வாரிசுரிமை தொகுதி அல்ல. அங்கும் அவருக்கு அதே அளவு பொறுப்பும், ஜனநாயக கடமையும் இருக்கிறது.’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.