பாஜக மற்றும் கூட்டணி அரசு கண்டித்து அதிமுக சார்பில் புதுச்சேரியில் பேரணி
புதுச்சேரி மாநிலத்தில் இதுநாள் வரை மாநில அந்தஸ்து வழங்காத பாஜக மற்றும் கூட்டணி அரசு கண்டித்து அதிமுக சார்பில் புதுச்சேரியில் நடைபெறும் பேரணி ஆர்ப்பாட்டத்தில் 10,000 அதிமுகவினர் கலந்து கொள்ள உள்ளனர் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக காட்டமாக கூறினார்.
புதுச்சேரி மாநிலத்திற்கு இதுநாள்வரையிலும் மாநில அந்தஸ்து வழங்காதது, மத்திய நிதிக் குழுவில் புதுச்சேரி மாநிலத்தை இணைக்காதது, மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்காதது, ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் புதுச்சேரிக்கென உரிய இடஒதுக்கீடு வழங்காதது முதலானவற்றிற்குக் காரணமான மத்திய அரசைக் கண்டித்தும், புதுச்சேரியை ஆளும் அரசு, ரேஷன் கடைகளைத் திறக்காதது, பொது விநியோகத் திட்டத்தை அமல்படுத்தாத்தை கண்டித்து புதுச்சேரியில் வருகிற 10-ம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அறிவித்துள்ளார்.
இந்த பேரணி ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக புதுச்சேரி மாநில அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் உப்பளத்தில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற்றது. இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், மாநில உரிமைகள் சம்பந்தமாக பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து என்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள பாஜக பத்தியிலும் ஆட்சியில் உள்ள சூழ்நிலையில் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து இதுவரை வழங்கப்படவில்லை என்றும், அதேபோன்று புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடத்தப்படவில்லை, ரேஷன் கடைகள் இதுவரை திறக்கப்படவில்லை, பொதுவிநியோகத் திட்டம் முழுமையாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால் அதனை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் 10,000-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொள்வார்கள் என்று கூறினார்.
மேலும் புதுச்சேரி நடைபெறக்கூடிய இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனியாக போட்டியிட உள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வி பயம் இன்று ஏற்பட்டுவிட்டது என்றும், அதனால் தான் தினமும் அதிமுகவை பற்றி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் பேசி வருவதாகவும், பாஜகவுடன் கூட்டணி இல்லாததால் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையுடன் வாக்குகளை அதிமுக பெற்றுவிடும் என்றார்.