ரதசப்தமி உற்சவம் திருப்பதி மலையில் சூரிய பிரபை வாகன புறப்பாடு
சூரியன் தன்னுடைய தட்சணாயன பயணத்தை முடித்துக் கொண்டு இன்று முதல் உத்ராயண பயணத்தை துவங்குகிறார்.
இந்த நிகழ்வை சூரிய ஜெயந்தி நாள் என்றும் கூறுவார்கள்.
இதனை வைஷ்ணவ கோவில்களில் ரத சப்தமி உற்சவ புறப்பாடு என்ற பெயரில் கொண்டாடுவார்கள்.
நாட்டிலுள்ள வைஷ்ணவ கோவில்களில் மிகவும் புகழ்பெற்ற கோவிலாக விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ரதசப்தமி உற்சவம் நடைபெறுகிறது.
ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு இன்று காலை சூரிய பிரபை வாகன புறப்பாடு முதல் இரவு சந்திர பிரபை வாகன புறப்பாடு வரை ஏழு வெவ்வேறு சாமி வாகன புறப்பாடுகள் திருப்பதி மலையில் உள்ள மாட வீதிகளில் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் ரத சப்தமி உற்சவத்தின் முதல் வாகன புறப்பாடு இன்று அதிகாலை ஐந்தரை மணிக்கு துவங்கி நடைபெற்றது.
சூரிய பிரபை வாகன புறப்பாட்டை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தை அடைந்து அதிகாலை ஐந்தரை மணிக்கு தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷம் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள், வேத மந்திர முழக்கம், திவ்ய பிரபந்த கானம் ஆகியவற்றுக்கு இடையே கோவில் மாட வீதிகளில் சூரிய பிரபை வாகன புறப்பாடு நடைபெற்றது.
இந்த நிலையில் சூரிய பிரபை வாகன புறப்பாடு வடக்கு மாட வீதியை அடைந்த நிலையில் ஏற்கனவே பஞ்சாங்க பண்டிதர்களால் கணிக்கப்பட்டிருந்த நேரமான காலை மணி 6. 40க்கு சூரிய கதிர்கள் சூரிய பிரபை வாகனத்தின் மீது விழுந்தன.
இதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட சூரிய பிரபை வாகன புறப்பாடு கோவிலை அடைந்தது.