ராவுகாலம் வந்துட்டு சீக்கிரம் வாங்கையா கடுப்பான பாஜக மாவட்ட தலைவர்
தமிழகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 10 ம் தேதி நடைப்பெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ம் தேதி முதல் நடைப்பெற்று வருகிறது.
கடைசி நாளான இன்று பாஜக வேட்பாளர் திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி பகுதியைச் சேர்ந்த எஸ்.ஜி.எம். ரமேஷ் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். 100 க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக வந்தவர்களை 200 மீட்டருக்கு அப்பால் போலீசார் தடுத்து நிறுத்தினா்.
வேட்பாளரோடு 4 பேர் மட்டுமே அனுமதி என்பதால் பாஜக நாகை மாவட்ட தலைவர் கார்த்திகேயன், திருவாரூர் பாஐக மாவட்ட தலைவர் பாஸ்கர், அமமுக மாவட்ட செயலாளர் மஞ்சுளா மற்றும் வேட்பாளரின் வழக்கறிஞர் என 4 பேர் வந்ததால் கூட்டணி கட்சியான பாமக தரப்பில் ஒருவரையும் விட வேண்டும் என வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து பாஜக தொண்டர்கள் கூட்டணி கட்சி தலைவர் கூட அனுமதிக்கவில்லை திமுகவினருக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அனுமதித்ததாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது இதனால் கால தாமதம் ஏற்பட்டது. வேட்பாளரோடு வழக்கறிஞர் செல்வதா? பாமக மாவட்ட செயலாளர் செல்வதா? என நீண்ட இழுபறி நடைப்பெற்றது.
இதனால் கடுப்பான பாஜக மாவட்ட தலைவர் கார்த்திகேயன் ராவுகாலம் வரப்போகுது சீக்கிரம் வாங்க என வேட்பாளரை இழுத்து சென்றார். கடைசியில் கூட்டணி கட்சியினரை யாரையும் அழைத்துச் செல்லாமல் வேட்புபனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானி டாம் வர்கீஸிடம் தான் முன்னாள் கம்யூனிஸ்ட் எம்.பி. எஸ்.ஜி.முருகையன் மகன் என்றும் தற்போதைய எம்பி செல்வராஜ், திமுக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ். விஜயன் உறவினர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மனிதன் வாழ்வதற்கு என்ன தேவை என்பதை பிரதமர் மோடி உணர்ந்து அடிப்படை தேவைகள் அனைத்தும் செய்து கொடுத்துள்ளார். பாஜக எந்த மதத்திற்கும், ஜாதிக்கும் எதிரான கட்சி இல்லை என தெரிவித்தார்.
சிஏஏ, ஹிஜாப் போன்றவைகளை அரசியல் லாபத்திற்காக எதிர்கட்சிகள் பொய்யாக பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டியவர் கம்யூனிஸ்ட் குடும்பத்தை சேர்ந்தவர் எதற்காக பாஜகவில் சேர்ந்து போட்டி இடுகிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்க கம்யூனிஸ்ட்க்கும், பிஜேபிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என கூறியவர் பழகுவதிலும், அனுகுமுறையில் ஒன்றுதான் என்றும் ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் இருந்தார்.
இப்போது எப்படி உள்ளார்கள் என உங்களுக்கே தெரியும் குற்றம் சாட்டிவர் முன்பு மக்களுக்காக போராடினார்கள், நின்றார்கள் இப்போது பாஜக மட்டுமே மக்களை நேசிக்கிறது எனக் கூறினார்.
கம்யூனிஸ்ட் எம்பிகள் தனது உறவினர்கள் என அறிமுகம் செய்தது குறித்த கேள்விக்கு நான் கட்சி அடிப்படையில் சொல்லவில்லை தனது உறவினர்கள் என்ற அடிப்படையில் சொன்னேன் என்று மழுப்பினார்.