மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சாகுபடி நடைபெற்று வரும் நிலையில், இயற்கை சாகுபடி என்பது மிக மிக குறைவாக உள்ளது. வெறும் 624 ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே இயற்கை சாகுபடி நடைபெறுகிறது. இதனை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பேட்டி.
பெங்களூர் மண்டல உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை மையம், தமிழ்நாடு அரசு விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு துறை, தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் இணைந்து நடந்தும் மண்டல அளவிலான இயற்கை வேளாண்மை கருத்தரங்கு இன்று நடைபெற்றது.
தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.
இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் இயற்கை விவசாயம் எவ்வாறு செய்ய வேண்டும், அதன் பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்த வேண்டும், மதிப்பு கூட்டு பொருளாக எவ்வாறு மாற்ற வேண்டும் உள்ளிட்ட பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்த கருத்தரங்கில் 120 வகையான இயற்கை விதைநெல்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், இதில் கலந்து கொண்டுள்ள விவசாயிகளுக்கு மூன்றாண்டு கழித்து சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றிதழில் ரசாயனம் எதுவும் கலக்காத சாகுபடி என்றும், இதன் மூலம் விவசாயிகள் வெளிநாடுகளுக்கு எளிதாக பயிர்களை ஏற்றுமதி செய்ய முடியும் எனது தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் 154 விவசாயிகள் மட்டுமே இயற்கை விவசாயிகள் என சான்றிதழ் பெற்றுள்ளனர்.
424 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை சாகுபடி நடைபெற்று வருகிறது. மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த இயற்கை சாகுபடி பரப்பளவு என்பது மிக மிகக் குறைவு. எனவே இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்