துறவறம் போகும் சிறுவனை மேளதாளம் முழங்க வழியனுப்பிய உறவினர்கள்
புதுச்சேரியில் துறவறம் போகும் 13 வயது சிறுவனை மேளதாளம் முழங்க சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று உறவினர்கள் வழியனுப்பிய நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது
புதுச்சேரி சித்தன்குடி பகுதியை சேர்ந்தவர் விகாஷ் சம்தர்யா. இவருடைய மனைவி பிரியங்கா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்களது இளைய மகன் 13 வயதான ஹார்த்திக் ஆன்ம வாழ்க்கையை மேற்கொள்ளும் விதமாக துறவறம் மேற்கொள்ளக்கூடிய முடிவை எடுத்திருக்கிறார். இது குறித்து தன்னுடைய பெற்றோர்களிடம் இவர் தெரிவித்தபோது அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து 2 வருடமாக சமண குருக்களுடன் பயணித்து வாழ்ந்து வந்த ஹார்த்திக் சமண கொள்கைகளை சரியாக கடைப்பிடித்ததால் அவருக்கு தீட்சை வழங்க சமண குருக்கள் அனுமதி தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ஹார்த்திக்,தனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஆசி பெற்றார். மேலும் தனது இல்லத்தில் இருந்து புத்தாடை அணிந்து, சாரட் வண்டியில் மேள தாளங்கள் முழங்க பாரதி வீதி, அண்ணா சாலை மற்றும் 45 அடி சாலையில் உள்ள ஜெயின் கோயில்களுக்கு ஊர்வலமாக சென்று ஹார்த்திக் வழிபாடு செய்து, நேற்று இரவு வீட்டில் இருந்து புறப்பட்டார்.
ஏப்ரல் 28-ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள பாலித்தீனா புனித ஆலயத்தில் தீட்சை பெறும் ஹார்த்திக், அதற்குப்பின் ஊர்,ஊராக வெறும் காலுடன் நடந்து செல்வது, வெள்ளை நிற ஆடை அணிவது, தனது சொந்த உறவுகளுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ளாமல் இருப்பது, சமண தர்மத்தை பிரச்சாரம் செய்வது போன்ற கடினமான வாழ்க்கையை பின்பற்றி செல்வது குறிப்பிடத்தக்கது.