திமுக ஆட்சியில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த 197 திருக்கோவில்களுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
பழனி திருக்கோவில் விவகாரம் குறித்து மீண்டும் ஒரு மனு வழங்கப்பட்டுள்ளது. அதன் மீதான மேல் நடவடிக்கை குறித்து ஊடகங்கள் வாயிலாக விரைவில் தெரிவிக்கப்படும் என கரூரில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி.
கரூர் அடுத்த திருமுக்கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் புனரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. சுமார் 5 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் இந்த விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் எம்.பி ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களுக்கு திருப்பணி மேற்கொள்வதற்காக தமிழக முதல்வர் 2023 – 2024 நிதியாண்டில் 100 கோடி ரூபாயும், நடப்பு ஆண்டில் 100 கோடியும் அரசு மானியமாக ஒதுக்கீடு செய்து கொடுத்தார். 2022-23ல் உபயதாரர்கள் நிதியாக 154 கோடியே 90 லட்சம் செலவில் 113 கோவில்களுக்கு திருப்பணி செய்யப்பட்டு 12 கோவில்களுக்கு குடமுழக்கு செய்யப்பட்டது. மேலும், 13 கோவில்களுக்கு குடமுழக்கு செய்வதற்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் அரசு மானியம் 100 கோடியுடன், உபயதாரர்கள் நிதியாக 49 கோடியே 95 லட்சம் நிதி மூலம் 84 கோவில்கள் புனரமைக்கும் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த 197 திருக்கோவில்களுக்கு திருப்பணிகள் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் இந்த கோவிலும் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைக்கும் பணி நடைபெறுகிறது.
பழனி திருக்கோவிலில் இந்துக்கள் இல்லாதவர்கள் நுழையக்கூடாது என்ற தீர்ப்புக்கு எதிராக மீண்டும் நேற்று மனு வழங்கப்பட்டுள்ளது.
அந்த மனுவின் மீது அளிக்கப்பட்ட பதில் கடிதத்தில், அறநிலையத்துறை மற்றும் துறையின் சட்ட ஆலோசகர்கள் கலந்தாலோசித்து தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, மேல் நடவடிக்கை குறித்து ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கப்படும் என்றார்.