சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி
ராஜபாளையத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் காவல் துறை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி சண்முகவேல் ராஜ் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரீத்தி பிரசன்னா கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது இதனைத் தொடர்ந்து பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் வடக்கு காவல் துறையினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக புறப்பட்டனர். இந்த பேரணியை நீதிபதிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நீதிமன்றம் எதிரே இருந்து புறப்பட்ட இருசக்கர வாகன பேரணி வடக்கு காவல் நிலையம் மாடசாமி கோயில் தெரு ஆவாரம்பட்டி தென்காசி சாலை மதுரை சாலை பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று ஜவகர் மைதானம் எதிரே நிறைவடைந்தது.