திருப்பதி மலை பாதையில் இரண்டு இடங்களில் பாறை சரிவு
வாகன ஓட்டிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் செல்ல கோரிக்கை.
திருப்பதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திருப்பதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது..
கனமழையின் தாக்கம் திருப்பதி மலையில் அதிகம் இருக்கும் நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல பயன்படுத்தப்படும் மலைப்பாதையில் உள்ள இரண்டு இடங்களில் பாறை சரிவு ஏற்பட்டது.
இதனால் மலைப்பாதையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தேவஸ்தான பொறியியல் துறை அதிகாரிகள் ஜேசிபி வாகனத்தை வரவழைத்து பாறை சரிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திருப்பதி திருமலை இடையே வாகனங்களை ஓட்டி செல்லும் நபர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கனமழை தொடரும் நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு மேல் இரவு நேரத்தில் திருப்பதி திருமலை இடையே வாகன போக்குவரத்தை நிறுத்தி வைப்பது பற்றிய ஆலோசனைகள் தீவிரமாக தேவஸ்தான வட்டாரங்களில் நடைபெறுகின்றன.