கிராமிய கலைஞர்கள் கலை பண்பாட்டு துறை முன்பாக மேள தாளம் இசையுடன் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமிய கலைஞர்கள் சங்கங்கள் சார்பில் திருநெல்வேலி கலை பண்பாட்டு துறை உதவி மண்டல அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிராமிய கலைகளான வில்லுப்பாட்டு, கணியான் கூத்து, நாதஸ்வரம், நையாண்டி மேளம், தோல்பாவை கூத்து போன்ற கலைகளுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கிராமிய கலைகளை பகுதி நேரம் பயிற்சிவிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டு மணி நேரம் மதிப்பூதியம் 750 என்பதனை 3000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். கலைஞர்கள் அடையாள அட்டை பெறுவதற்கான விதிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.
அழிவு நிலையில் உள்ள நாட்டுப்புற கலைகளுக்கு முன்னுரிமை அளித்து அவைகளை அரசு கலைக் கல்லூரிகளில் பாடமாக கொண்டு வர வேண்டும் அதே போன்று வீடு இல்லாத கலைஞர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மேளம், தாளம் நாதஸ்வர இசையுடன் கிராமிய கலைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தங்களது கோரிக்கைகளுக்கு செவிமடுத்து உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்திய படியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.