கூட்டுறவு குடிசைத் தொழிற் சங்கம் சார்பில் நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை மற்றும் கண்காட்சி
தஞ்சாவூர் அரண்மனை வளாக சங்கீத மஹால் மாடியில் இயங்கிவரும் தஞ்சாவூர் கைவினைத் தொழிலாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழிற் சங்கம் சார்பில் நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை மற்றும் கண்காட்சி துவங்கியுள்ளது.
தஞ்சாவூர் கைவினைத் தொழிலாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழிற் சங்கம் 1958-ல் தொடங்கப்பட்டு கடந்த 66 ஆண்டுகளாக தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீத மஹாலில் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் நவராத்திரி விழாவினை முன்னிட்டு “கொலு மெகா விற்பனை மற்றும் கண்காட்சி தொடங்கியுள்ளது.
தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கைவினை கலைஞர்களிடமிருந்து பல வண்ணமிகு பொம்மைகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக அஷ்டலட்சுமி செட், காமாட்சி தங்கரதம் செட், திருப்பதி கோபுரம் செட், தசாவதாரம் செட், தெப்பக்குளம் செட், 63 நாயன்மார்கள் செட் ஆகியனவும், கொல்கத்தா பொம்மைகளும் இக்கண்காட்சியில்
இடம்பெற்றுள்ளன.
ரூ.50 முதல் ரூ.20 ஆயிரம் வரையிலான கலை நயமிக்க விலை உயர்ந்த கொலு பொம்மைகள் இடம்பெற்றுள்ளன.
அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற உள்ள இக்கண்காட்சியில் 10% முதல் 20% வரை சிறப்பு தள்ளுபடியுடன் கொழு பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் இது குறித்து பொம்மை வாங்க வந்த ஜானகி கூறுகையில்”
நான் 20 ஆண்டுகளாக இங்கு தான் கொலு பொம்மைகள் வாங்கி வருகிறேன். இங்குதான் பல மாவட்டங்களைச் சேர்ந்த கைவினைத் கலைஞர்களின் பொம்மைகள் கிடைக்கும். வெவ்வேறு டிசைன்களில் புது வகையான பொம்மைகள் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகமாகும். அதன்படி இந்த ஆண்டு வெங்கடாஜலபதி மற்றும் படுத்திருக்கும் கிருஷ்ணர் பொம்மைகள் அறிமுகமாகியுள்ளது. பொம்மை வாங்குவதை விட இவ்வளவு பொம்மைகளை ஒரே இடத்தில் பார்ப்பதே எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. என்று கூறினார்.