in ,

சங்கொலி, நகரி வாத்தியங்கள் முழங்க விடிய விடிய கொட்டும் மழையிலும் கிரிவலம்

சங்கொலி, நகரி வாத்தியங்கள் முழங்க விடிய விடிய கொட்டும் மழையிலும் கிரிவலம்

 

ஆவணி மாத பௌர்ணமியையொட்டி நிலவொளியில் இரவு முழுக்க 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்…

சங்கொலி, நகரி வாத்தியங்கள் முழங்க விடிய விடிய கொட்டும் மழையிலும் கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள்…

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் என்றாலே ஆன்மீக பக்தர்களின் நினைவுக்கு வருவது 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலம்.

திருவண்ணாமலை கிரிவல பாதையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட பல்வேறு விசேஷ நாட்களில் பல லட்சம் பக்தர்களும் பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரையை தரிசித்து செல்வது வழக்கம்.

அதன்படி ஆவணி மாத பௌர்ணமி இன்று (19.08.2024) அதிகாலை 02:58 மணிக்கு தொடங்கி நாளை 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 01:02 மணிக்கு நிறைவடைய உள்ளதாக திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை திருக்கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்கள் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று ‌நீண்ட வரிசையில் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அதே வேளையில் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமிலிங்கம், வாயு லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கங்களையும், திருநேர் அண்ணாமலையார், அடி அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ள தெய்வங்களை வழிபட்டு நமசிவாய மந்திரத்தை ஜெபித்தபடி பௌர்ணமி நிலவொளியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையிலும் குடைகளைப் பிடித்தவாறும், மழையில் நனைந்த படியும் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டனர்.

குறிப்பாக பௌர்ணமி முழு நிலவில், சங்கொலி, நகரி வாத்தியங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டனர்.

ஆன்மீக பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருக்கோவில், கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆங்காங்கே குடிநீர் வசதியும் அடிப்படை வசதியும் தற்காலிக பேருந்து நிலையங்களும் பார்க்கிங் வசதிகளும் முறையாக அமைத்துக் கொடுக்கப்பட்டது.

குறிப்பாக கிரிவலப் பாதையில் ஆன்மீக பக்தர்களுக்கு ஏற்றவாறு மாவட்ட ஆட்சியர் கிரிவலம் பக்தர்களுக்கு குடிநீர் மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கே.பிரபாகர் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் கிரிவலப் பாதை, நகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டு பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர்.

What do you think?

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமி முடித்து ஊர் திரும்பும் பக்தர்கள்