முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார்
அதிமுகவுடன் இரண்டு கட்ட பேச்சு வார்த்தை முடிந்துள்ளதாகவும் பாஜகவும் முக்கிய நபர்களை அனுப்பி பேசி உள்ளதாகவும் ஒரு வாரத்தில் கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்த வரையில் 2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு என்றும் ஆனால் தற்போது நாடாளுமன்ற தேர்தல் வந்துள்ளதால் அதையும் எதிர் கொள்ள வேண்டிய சூழல் உள்ளதாக தெரிவித்தார்.
கல்வியையும் சுகாதாரத்தையும் தவிர மற்ற இலவசங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர் ஜனநாயகம் என்பது பணநாயகமாக மாறிவிட்டதால் பணத்தைக் கொடுத்து வாக்கை வாங்கி விடலாம் என்று நம்பிக்கை உள்ளதாக விமர்சித்த அவர் கூட்டணிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு 24ஆம் தேதி சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றதாகவும் ஆனால் அந்த கூட்டத்தில் ஒருமித்த முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
தலைவர் என்ற முறையில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க தனிப்பட்ட அதிகாரம் தனக்கு கொடுக்கப்பட்டாலும் நிர்வாகிகளின் கருத்தை கேட்டறிய வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.
மேலும் அதிமுகவுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகவும் பாஜகவும் முக்கிய தலைவர்களும் தன்னை தொடர்பு கொண்டு கூட்டணி குறித்து பேசி உள்ளதாகவும் தெரிவித்த சரத்குமார் ஒரு வாரத்தில் கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிவித்தார்.