திருவாரூர் பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 எனும் பெயரில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள், நூலகங்கள் மற்றும் அலுவலகங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்.
இதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலும், நன்னிலம் தொகுதியிலும் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டார். மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு நடைபெற்ற காலாண்டு தேர்வு மையத்தைப் பார்வையிட்டு, பள்ளியை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். பள்ளியின் மேம்பாட்டிற்கு ஆசிரியர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தார்கள்.
அது தொடர்பாக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா அவர்களிடம் பேசுவதாக உறுதியளித்தார்.
அருகில் இருந்த ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையத்திற்கும் சென்ற அமைச்சர் அங்கிருந்த இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களிடம் கலந்துரையாடியானர்.
அவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த கற்றல் மற்றும் கற்பித்தல் உபகரணங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து நன்னிலம் தொகுதிக்குட்பட்ட குடவாசல் கிளை நூலகத்திலும் திடீர் ஆய்வை மேற்கொண்டார். பழைய நூலக கட்டடத்தை அகற்றுவது குறித்து நூலகரிடம் கேட்டறிந்தார். வாசகர்களிடம் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.