in

வந்தவாசி அருகே எக்ஸ்னோரா சார்பில் வெயிலில் முதியோர் தற்காப்பு கொள்வது குறித்த கருத்தரங்கம்


Watch – YouTube Click

வந்தவாசி அருகே எக்ஸ்னோரா சார்பில் வெயிலில் முதியோர் தற்காப்பு கொள்வது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பிருதூர் தூய வளனார் முதியோர் இல்லத்தில் எக்ஸ்னோரா அமைப்பின் சார்பாக, கடும்வெயிலில் இருந்து முதியோர் தற்காப்பு கொள்வது குறித்த கருத்தரங்கம் எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் தலைமையில் நடைபெற்றது.எக்ஸ்னோரா துணைத் தலைவர்கள் பா. சீனிவாசன், மு. பிரபாகரன்,எக்ஸ்னோரா இயக்குநர் க. வாசு முன்னிலை வகித்தனர்.செயலாளர் ம. ரகுபாரதி வரவேற்றார்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வழூர் வட்டார மருத்துவ அலுவலர் எம்.ஆர்.ஆனந்தன் பேசுகையில், வெயில் மனிதனுக்கு தேவையானது தான். ஆனால் கடும் வெயில் மனிதர்களுக்கு ஆபத்தானது.மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். சுற்றுப்புற வெப்பநிலை சராசரி வெப்பநிலையை விட அதிகமாகும் போது வியர்வை, தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லுதல் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான வெப்பம் வெளியேறி உடல் சராசரி வெப்பநிலையை அடைகிறது. கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும் போது உப்புசத்து பற்றாக்குறையும் நீர்ச்சத்தை பற்றாக்குறையும் ஏற்படுகின்றன இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலை சுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்படலாம் வெயிலின் தாக்கத்தால் வேர்க்குரு, அரிப்பு, தேமல், மணல்வாரி அம்மை, வயிற்றுப் பிரச்சினை போன்றவை ஏற்படும். தண்ணீரை அதிகம் குடிக்காதவர்களுக்குச் சிறுநீரகக் கல் வரக் கூடும். எனவே தாகம் இல்லை என்றாலும் கூட குறைந்தது ஐந்து முதல் ஏழு லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்

சிறுநீரானது திடீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும் அளவில் தேவையான அளவு நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும். அதிக அளவில் மோர், உப்பு மோரும் கலந்த அரிசி கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு,ஓ ஆர் எஸ் உப்பு கரைசல் ஆகியவற்றை பருகலாம். பயணத்தின் போது குடிநீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும் தேவையில்லாமல் வெயிலில் வெளியே சுற்றக்கூடாது. வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான தளர்ந்த காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

திறந்தவெளியில் வேலை செய்வதாக இருந்தால் தலையில் பருத்தித் துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும் நுங்கு, தர்பூசணி, இளநீர், மோர் வெள்ளரிக்காய் போன்றவற்றை தவறாமல் உட்கொள்வது நல்லது. உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆட்டு இறைச்சி, மீன் ஆகியவற்றை அளவோடு சாப்பிடலாம் பதப்படுத்தப்பட்ட உணவு, கோழி இறைச்சி, கருவாடு போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று பேசினார். தனது தந்தையின் நினைவுநாளை முன்னிட்டு எக்ஸ்னோரா இயக்குநர் இரயில்வே தனசேகரன் ஏற்பாட்டில் காப்பக முதியோர்களுக்கு சிற்றுண்டி வழங்கினார்.

இந்த நிகழ்வில் எக்ஸ்னோரா சங்க நிர்வாகிகள் வந்தை குமரன், இரா.அருள் ஜோதி, மனோஜ் குமார், அ.ஷாகுல் அமீது, அருட்சகோதரி ரெக்சலீன், வட்டார மருத்துவ ஆய்வாளர் சீதாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதியோர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இறுதியில் பொருளாளர் வி.எல். ராஜன் நன்றி கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

சுவாமி தரிசனம் செய்த ஆளுநர் – பெருமாள் புகைப்படம் பரிசு

கோவிஷீல்ட் தடுப்பூசியை திரும்ப பெற்றது ஏன்