கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு யார் காரணம் மதுரையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு யார் காரணம் என வீடு, வீடாக சென்று மக்களிடம் கூறுவோம் என மதுரையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்தனர்.
ஆனால் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டபோது இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர், இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, கைதாக மறுத்த போராட்டக்காரர்களை காவல்த்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
அந்நேரத்தில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு பாஜக மூத்த தலைவர் ஹச்.ராஜா வந்தார், காவல்துறை வாகனத்தில் இருக்கக்கூடிய பாஜகவினரை விடிவிக்கும்படி எச்.ராஜா கூறினார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது, மேலும் போராட்டக்காரர்களின் ஒரு பிரிவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர், முன்னதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “மக்களை கொள்வதற்காகத்தான் திமுக 40 தொகுதிகளில் வென்றது, கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது தான் தமிழகத்தில் கள்ளச்சாராயம் வந்தது.
கள்ளச்சாராய உயிரிழப்புக்கு யார் காரணம் என பாஜக மக்களிடம் எடுத்துக் கூறுவதற்காக போராட்டம் நடத்துகிறது, பாஜகவின் போராட்டத்தை ஒடுக்கினால் வீடு வீடாகச் சென்று கள்ளச்சாராயம் மரணம் குறித்து கூறுவோம்.
கள்ளச்சாராய் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓடி, ஒளிந்து கொண்டுள்ளார், கள்ளச்சாராய உயிரிழப்பை தொடர்ந்து தமிழகத்திலிருந்து திமுக அரசு அகற்றப்பட வேண்டும், கனிமொழி கூறியது போல தமிழகத்தில் இளம் விதவைகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது” என கூறினார்.