மயிலாடுதுறையில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
மயிலாடுதுறையில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம், மத்திய மாநில அரசுகளின் வரிவிதிப்பை கண்டித்து இன்று வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
மத்திய அரசு கடைகளின் வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கும் புதிய நடைமுறையை கண்டித்தும், தமிழக அரசு ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்துவரி உயர்வு செய்துள்ளதை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக அரசின் வணிக உரிம கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும், தொழில் வரி உயர்வை கண்டித்தும் மயிலாடுதுறையில், இன்று வணிகர்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக மயிலாடுதுறையில் பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி, துலா கட்டம் மார்க்கெட் பகுதி, வண்டிப்பேட்டை பகுதி ரயிலடி கடை வீதி, பட்டமங்கலம் தெரு மகாதான தெரு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை நகரம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட கடைகள் வணிக நிறுவனங்கள் அடைத்து தங்கள் எதிர்ப்புகளை மத்திய மாநில அரசுகளுக்கு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இன்று பிற்பகல் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதுடன் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியருக்கு மனுவாக அளிக்கின்றனர். இதன் காரணமாக மயிலாடுதுறை கடைவீதி வெறிச்சோடி காணப்படுகிறது.