சிவனடியார்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சன்னதிகளில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பதை கண்டித்து சிவனடியார்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
கரூரில் 800 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள சன்னதிகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில், கோவிலின் தொன்மையை கருத்தில் கொண்டும், பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதியும், கோவிலில் உட்பிரகாரங்கள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தீபம் ஏற்ற தடை செய்யப்பட்டுள்ளது. விசேஷ தினங்களில் சீட்டு விற்பனை கூடத்திற்கு எதிரில் உள்ள விளக்கேற்றும் கூண்டுகளிலும், மற்ற நாட்களிலும் கொடிமரத்தின் அருகில் உள்ள மேசைகளிலும் தீபம் ஏற்ற வேண்டும் என கோவில் வளாகத்தில் பதாகை வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த அறிவிப்பை கண்டித்து இரவு அர்த்த சாம அடியார்கள் பூஜை முடிந்தபின் சிவனடியார்கள் கோவில் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, காலம்காலமாக கோவிலில் உள்ள சன்னதியில் விளக்கேற்றி வழிபாடு செய்து வருகிறோம். ஆனால், தற்போது கோவில் செயல் அலுவலர் பக்தர்கள் சன்னதியில் விளக்கேற்ற கூடாது என தடுக்கிறார்.
எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கும், இந்து அறநிலையத்துறை சம்பந்தப்பட்ட ஆணையரையும் கேட்டுக்கொள்கிறோம். மேலும், பாரம்பரியமாக தீபம் ஏற்றி வழிபாடு செய்யக்கூடிய விஷயத்தை தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.