அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வழிப்பறி சம்பவங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கைது; செல்போன் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி பூபாலன் நகரை சேர்ந்தவர் சுப்பையா என்பவரது மனைவி வேலம்மாள்(60). இந்நிலையில் வேலம்மாள் தனது கணவருடன் வீட்டின் வாசலில் அமர்ந்து இருந்த போது அவ்வழியாக பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் வேலம்மாள் கையில் வைத்திருந்த ரூ 18,000 மதிப்புடைய செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து கன்னிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர். இதனால் வயதான தம்பதியர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து வேலம்மாள் புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும் பந்தல்குடி பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்களும், அருப்புக்கோட்டை நகர் பகுதியில் ஒரு இருசக்கர வாகனமும் திருடு போன நிலையில் காந்திநகர் அருகே கத்தியை காட்டி மிரட்டி ரூ 100 பணம் மற்றும் இருசக்கர வாகனம் வழிப்பறி சம்பவமும் நடைபெற்றது.
அடுத்தடுத்து நடைபெற்ற இந்த குற்ற சம்பவங்கள் குறித்து பந்தல்குடி காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம் மற்றும் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டது ஆத்திபட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கதிர் என்கிற கதிரேஷ்வரன்(19), ராஜீவ் நகரைச் சேர்ந்த நேதாஜி(24), சதீஷ்(24), செம்பட்டி என்ஜிஓ காலனியைச் சேர்ந்த தனுஷ் என்ற முத்துகிருஷ்ணன்(19) மற்றும் இரண்டு 17 வயது சிறுவர்கள் உட்பட ஆறு பேர் இணைந்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் இவர்கள் அனைவரும் கூட்டாளிகள் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.