தேர்தல் விதிகளுக்கு முரணாக உள்ள வேட்பாளர் ஜோதிமணி சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
கரூர் பாராளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் சமூக வலைத்தளங்கள் மூலமாக ஆதரவு திரட்டி வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.
கரூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜோதிமணி பதவியில் இருந்தார் அந்த சமயத்தில் அவர் செய்த திட்டப்பணிகளை அரசு பள்ளி ஆசிரியை மற்றும் மாணவி ஒருவர் எடுத்துரைக்கும் வீடியோ காட்சிகள் ஜோதிமணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் முடிவில் கை சின்னத்திற்கு வாக்களிப்பீர் என கூறப்பட்டுள்ளது.
கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக சமூக வலைத்தள பிரச்சாரத்தில் அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் அரசு பள்ளி மாணவியின் வீடியோவை பயன்படுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் வேட்பாளரின் பிரச்சாரத்திற்கு சமூக வலைத்தளங்களில் அரசு அலுவலர் மற்றும் பள்ளி மாணவியை பயன்படுத்தப்படுவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும், அது தொடர்பான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.