திருப்பதி மலையில் சிறப்பு விசாரணை குழுவினர் ஆய்வு ஆவணங்கள் பறிமுதல்
பிரசாதம் தயார் செய்ய திண்டுக்கலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கலப்பட நெய் அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம்.
திருப்பதி மலையில் சிறப்பு விசாரணை குழுவினர் ஆய்வு ஆவணங்கள் பறிமுதல்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதங்கள் தயார் செய்ய தேவையான நெய்யை அனுப்பும் ஒப்பந்தத்தை பெற்ற திண்டுக்கல்லை சேர்ந்த ஏ ஆர் டைரி நிறுவனம் மிருக கொழுப்பு கலந்த நெய்யை அனுப்பி வைத்தது ஆய்வக சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டு அது தேச அளவில் பெரு விவகாரமாக உருவெடுத்தது.
இந்த நிலையில் ஏ ஆர் டைரிமீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் அளித்த புகார் அடிப்படையில் திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஆந்திர அரசு கலப்பட நெய் விவகாரம் பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைத்தது.
இந்த நிலையில் பொதுநல வழக்கு ஒன்றின் மூலம் உச்ச நீதிமன்றம் சிபிஐ அதிகாரிகள், உணவு தர கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், ஆந்திர மாநில போலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைக்க உத்தரவு பிறப்பித்தது.
அந்த சிறப்பு விசாரணை குழு நேற்று திருப்பதிக்கு வந்து பல்வேறு வகையான விசாரணைகளில் ஈடுபட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை திருப்பதி மலைக்கு சென்ற சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் அங்குள்ள ஆய்வகம், நெய் இருப்பு வைக்கும் கிடங்கு, நெய் தொட்டிகள், பூந்தி தயாரிக்கும் பகுதி ஆகிய இடங்கள் உட்பட நெய் விநியோகம் தொடர்பான அனைத்து பகுதிகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டதுடன் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது தொடர்பான பல்வேறு ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.