ரம்ஜானை முன்னிட்டு முகமதியா பள்ளிவாசலில் 5 ஆயிரத்துக்கு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.
இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.
நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால், இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து நாடு முழுவதும் ரமலான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.
ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து இன்றைய தினம் ஈதுல் ஃபித்ரு எனப்படும் ஈகைத்திருநாளை கொண்டாடி வருகின்றனர். ஏழைகளும் பசியின்றி இப்பண்டிகையை சந்தோசத்தோடு கொண்டாட வேண்டி தொழுகைக்கு முன்னரே பெருநாளுக்கான தர்மமாகிய பித்ராவை நிறைவேற்றி, இறைவனிடம் அனைவரின் நலத்திற்கும் வளமான, அமைதியான வாழ்க்கைக்காகவும் பிரார்த்தித்து நண்பர்களோடு மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் சுல்தான்பேட்டை முகமதியா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் ஒரு சேர சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.மேலும் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் புதுச்சேரி இந்தியா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் முகமது அசான் தலைமையில் வாக்குகளை சேகரித்தனர்.