சூரியனார் கோயில் மூலவரான சிவ சூரிய பெருமான் நவகிரகங்களுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம்
நவகிரக கோயில்களில் பிரதானமான சூரியனார் கோயிலில் உள்ள மூலவரான சிவ சூரிய பெருமான் உள்ளிட்ட நவகிரகங்களுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம். விடுமுறை தினம் என்பதால் காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்.
நவகிரக கோவில்களில் பிரதானமான சூரியன் பரிகார ஸ்தலமாகவும் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானதாகவும் இருந்து விளங்கக்கூடிய தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே சூரியனார் கோயில் அருள்மிகு உஷா தேவி சாயாதேவி அம்பிகை சமேத சிவ சூரிய பெருமான் திருக்கோயில் அமைந்துள்ளது.
நவகிரகங்களில் சூரியன் பரிகார ஸ்தலமாக இருந்து விளங்கக்கூடிய இக்கோயிலில் ஆண்டு முழுவதும் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
ஆண்டுதோறும் தை மாதத்தில் இக்கோயிலில் உள்ள மூலவர் உட்பட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கும் அந்த வகையில் கோயிலில் உள்ள கோள் தீர்த்த விநாயகர், மூலவரான உஷா தேவி சாயாதேவி அம்பிகை சமேத சிவ சூரிய பெருமான், விசாலாட்சி அம்மாள், விஸ்வநாதர், குருபகவான், சந்திரன், ராகு, கேது, சனீஸ்வரன், புதன், அங்காரகன், சுக்கிரன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருள விசேஷ பூஜைகள் நடந்தது.
குடியரசு தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழக மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வழிபாடு மேற்கொண்டனர்.