சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் பங்குனி திருத்தேரோட்டம்
கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமாகவும், 108 வைணவ தலங்களில் 20 வது தலமாக போற்றப்படும் நாச்சியார் கோவிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார்கோயிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் சீனிவாச பெருமாளும், வஞ்சுளவல்லி தாயாரும் தம்பதி சமேதராய் திருமண கோலத்தில் நின்ற நிலையில் அருள் பாலிப்பதால், இங்கு தாயாருக்கென்று தனி மசன்னதி இல்லை. 108 வைணவ தலங்களில் 20வது திவ்யதேசமாகவும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் 14வது திவ்ய தேசமாகவும் போற்றப்படுகிறது.
இத்தலத்தில், பங்குனி திருத்தேர் திருவிழா 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அது போல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கி நாள்தோறும் யாளி, கிளி, சூரிய பிரபை, சேஷ, அன்னபட்சி, கமல, அனுமன், யானை, குதிரை என பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நான்காம் நாள் உலக பிரசித்தி பெற்ற கல்கருட சேவை வெகு சிறப்பாக நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டமும், நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தொடர்ந்து நண்பகல் தீர்த்தவாரியும் பின்னர் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தாவர்ணத்துடன் இவ்வாண்டிற்காண பங்குனி தேர்திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.