நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோயிலில் கல்கருட சேவை
ஏராளமானோர் தரிசனம்
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் சீனிவாசபெருமாள் கோயிலில் கல்கருட சேவை இன்று இரவு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் 108 திவ்யதேசங்களில் 20வது தலமாக வஞ்சுளவல்லி உடனுறை சீனிவாசப்பெருமாள் கோயில் திகழ்கிறது.
இக்கோயிலில் புகழ் பெற்ற கல்கருட சேவை மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி கடந்த 3-ம்தேதி முக்கோடி தெப்பத்திருவிழா எனும் மார்கழிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் காலை, மாலையில் பெருமாளும், தாயார் சூரிய பிரபை, யாளி, கிளி, சேஷம் உள்ளிட்ட வாகனத்தில் வீதியுலா எழுந்தருளினர்.
விழாவில் புகழ்பெற்ற கல்கருட சேவை இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று மாலை 6.30 மணிக்கு மேல் 7 மணிக்கு கருடாழ்வார் சன்னதியில் இருந்து கல்கருட பகவானை 4 பக்தர்கள் தூக்கி வர, பின்னர் 8 பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என்று படிப்படியாக மொத்தம் 128 பேர் கல்கருட பகவானை தோளில் சுமந்துக்கொண்டு வாகன மண்டபத்தில் எழுந்தருள கல்கருடசேவை நடைபெற்றது.
இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு கருடாழ்வாரை தரிசனம் செய்தனர். பின்னர் இரவு 9.30 மணிக்கு சீனிவாசப்பெருமாள் கல்கருட வாகனத்திலும், வஞ்சுளவல்லி தாயார் வெள்ளி அன்னப்பட்சி வாகனத்தில் ஓலைச்சப்பரத்தில் வீதியுலா எழுந்தருளினர்.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பிரபாகரன், தக்கார் முருகன் மற்றும் உபயதாரர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.