போனஸ் கேட்டு மயிலாடுதுறையில் தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தம், நகரில் துப்புறவு பணிகள் பாதிப்பு
மயிலாடுதுறை நகராட்சியில் தூய்மை பணியில் 194 பணியாளர்கள் அவுட்சோர்சிங் முறையில் சரம் என்ற தனியார் நிறுவனம் மூலம் பணியாற்றி வருகின்றனர். வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து குப்பை கிடங்குக்கு கொண்டு செல்வது இவர்களது முக்கிய பணியாக உள்ளது. தீபாவளியை முன்னிட்டு இவர்கள் தங்களது ஒரு மாத சம்பளமான பன்னிரண்டு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் நிறுவனத்தால் முடியாது என்று கூறி ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் ஆவது வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அதனை வழங்க தனியார் நிறுவனம் மறுத்துவிட்டது. இந்நிலையில் போனஸ் வழங்க வலியுறுத்தி இன்று காலை தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மயிலாடுதுறையில் துப்புறவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.