உயிரினங்களையும் விட்டு வைக்காத கோடை வெப்பம்
தண்ணீர் தேடி வீட்டு மொட்டை மாடியில் பறந்து வந்த மயில் வெப்பம் தாங்காமல் சுருண்டு விழுந்து உயிரிழந்த சோகம், உயிரினங்களையும் விட்டு வைக்காத கோடை.
இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவமழை சரியாக பெய்யாத நிலையில் குளம் குட்டைகள் ஆறுகள் வாய்க்கால்கள் என அனைத்தும் வறண்டு காணப்படுகிறது.
இந்த ஆண்டு கோடை வெப்பம் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் வெப்ப அலை வீசி வருகிறது.
இதன் காரணமாக மனிதர்கள் நடமாட்டம் பகல் பொழுதில் குறைந்துள்ள நிலையில், தண்ணீர் தேடி மயில் உள்ளிட்ட பறவைகள் விலங்குகள் பல இடங்களில் அலைந்து வருகின்றன.
நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாத கொடுமையை விளக்கும் வகையில் மயில் ஒன்று குடியிருப்பு பகுதியில் புகுந்து தண்ணீர் கிடைக்காமல் சுருண்டு விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் நடைபெற்றுள்ளது.
குத்தாலம் பெரிய செங்குந்தர் தெருவில் உள்ள ஒளி முகமது என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் வீட்டு நீர் தேக்க தொட்டியின் அருகில் ஏதோ விழும் சத்தம் கேட்டுள்ளது.
இதனை அடுத்து வீட்டு உரிமையாளர் அங்கு சென்று பார்த்த போது மூடப்பட்ட தண்ணீர் தொட்டிக்கு அருகே தேசிய பறவை மயில் இறந்து கிடந்துள்ளது.
உடனடியாக குத்தாலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார் பின்னர் அவர்கள் வந்து பார்த்தபோது மயில் இறந்த நிலையில் கிடந்துள்ளது தெரியவந்தது மயிலின் உடலை தீயணைப்புத் துறையினர் பையில் போட்டு எடுத்துச் சென்றனர்.