நாகை மாவட்டத்தில் கோடை உழவு பணிகள் தீவிரம்; உழவு மானியம், வேளாண் இடுப்பொருள்கள் வழங்க வேண்டும்: ஜூன் 12 மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கவில்லை எனில் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கு அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
பேட்டி: ஸ்ரீதர் – விவசாயி – மீனம்பநல்லூர்
ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவர் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுமா என்ற கேள்வியுடன் விவசாயிகள் கோடை மழையை நம்பி தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேவூர், எட்டுக்குடி, சாட்டிக்யகுடி வலிவலம், வாழக்கரை, மீனம்பநல்லூர் கீழையூர், திருக்குவளை, சீராவட்டம் ,திருப்பூண்டி, கருங்கண்ணி, சோழவித்யாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பெய்த கோடை மழையின் காரணமாக வயல்களில் டிராக்டர் மூலம் கோடை உழவினை (புழுதி) மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு உழவு செய்வதன் மூலம், கடினமான கட்டிகள் உடைந்து, மண் லேசாகி விடும். கோடை மழைநீர், நிலத்தில் தேங்கினால் மண்ணின் ஈரத்தன்மை அதிகரித்து, மண் அரிப்பு தடுக்கப்படுகிறது, நிலத்தில் களைச் செடிகள் மக்கி எருவாகி விடும் என்பதால் கோடை உழவு பணியை அதிக ஆர்வத்தோடு செய்து வருகின்றனர் மேலும் வயல்களை சமன் செய்தல்,வரப்புகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கோடை உழவு மேற்கொள்ள தமிழக அரசு வழங்கும் கோடை உழவு மானியம்,விதை மானியம் உர மானியம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள வேளாண் இடுபொருள்களை விரைவாக தமிழக அரசு வழங்க வேண்டும், கோடை பயிராக பயிர் செய்யப்பட்ட பருத்தி எள்ளு மல்லிப்பூ எண்ணெய் வித்துக்கள் திடீர் கோடை மழையால் பாதிப்படைந்துள்ளது
இது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது போல் மேட்டூர் அணையில் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கவில்லை எனில் குறுவை சாகுபடி மேற்கொள்ளாத விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என நாகை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்