in

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (01.07.2024)


Watch – YouTube Click

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (01.07.2024)

 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டம்

மத்திய அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தையும் இந்திய சாட்சிய சட்டத்தையும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருத மொழியிலும், இந்தி மொழியிலும் மாற்றம் செய்து இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது, இதனை கண்டித்து தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் காமராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர், இதில் வழக்கறிஞர்கள ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

திருத்துறைப்பூண்டியில் ஒரேநேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒருமணிநேரம் இடைவிடாது கராத்தே செய்தும் சிலம்பம் சுற்றியும் சாதனை செய்தனர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் முத்தூஸ் கராத்தே & ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆரஞ்சு உலக சாதனை கராத்தே மற்றும் சிலம்பம் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ஒரு மணி நேரம் இடைவிடாது கராத்தே செய்தும் சிலம்பம் சுற்றியும் சாதனை செய்தனர்

இந்த நிகழ்வில் திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் தொடர்ந்து உலக சாதனை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது .நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை முத்தூஸ் கராத்தே நிறுவனர் முத்துக்குமரன் மற்றும் கராத்தே பயிற்சியாளர்கள் செய்திருந்தனர்.

 

 

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் திமுக ஆட்சி ஏற்ற பிறகு அதிநவீன இயந்திரங்கள் அமைக்கப்பட்டதன் காரணமாக நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து பொதுமக்கள் நோய் இன்றி வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளதாக திருவாரூரில் கலைஞர் நூறாண்டு நினைவு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் பேச்சு

திருவாரூர் நியூ பாரத் பள்ளியில் கலைஞர் நுற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு திமுக மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைப்பெற்றது.

இந்த முகாமில் சர்க்கரை அளவு,ஈசிஜி,இரத்த அழுத்தம்,கண் பார்வை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு மருத்துவர் பரிந்துரையின் பேரில் மருந்துகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து பேசிய பூண்டி கலைவாணன் தெரிவித்த போது… கடந்த 10 ஆண்டுகளாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் தற்போது திமுக ஆட்சி ஏற்ற பிறகு புதிய தரம் உயர்த்தப்பட்டது இதன் தொடர்ச்சியாக அதிநவீன கேத்தலாக் இயந்திரம் ,எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது இதனால் நோய்களை முன்கூட்டியே அறிந்து நோய்களை குறைந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்

இந்த முகாமில் மருத்துவ அணி மாநில துணை செயலாளர் அஞ்சுகம் பூபதி,பொதுக்குழு உறுப்பினர் செந்தில்,நகர கழக செயலாளர் வாரைபிரகாஷ்,நகர மன்ற துணை தலைவர் அகிலாசந்திரசேகர்,மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளர் திவாகரன், தலைவர் சரவணன்,துணை அமைப்பாளர்கள் ரமேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

 

முசிறி தலைமையாசிரியர் கலந்தாய்வில் முறைகேடு – டிட்டோ ஜாக் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்பாட்டம்.

திருச்சி மாவட்டம் முசிறியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டமன்றத்தில் ஆசிரியர் சங்கத்தினர் பணி மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.பணி மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு முசிறி கல்வி மாவட்ட அலுவலர்
(தொடக்கக் கல்வி) மதியழகன் வருகை தந்தார். அவரிடம் டிட்டோ ஜாக் ஆசிரியர் சங்கத்தினர் முசிறி, துறையூர், புள்ளம்பாடி ஆகிய பகுதிகளில் மொத்தம் ஏழு தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்ததாகவும் இதில் முசிறி தாலுகாவில் உள்ள மேல கொட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் காலி பணியிடத்தை கலந்தாய்வில் காட்டாமல் கலந்தாய்வுக்கு முன்னதாக நிரப்பியது தவறு என கூறி முசிறி கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சங்கத்தின் நிர்வாகிகள் தமிழக முதல்வர் கலந்தாய்வில் நடைபெற்றுள்ள முறைகேட்டை விசாரணை செய்து நியாயமான முறையில் கலந்தாய்வு நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

 

 

ஓடிசி – மருந்துகளை வகைப்படுத்தி அறிவிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் வணிகர்கள் பிரதிநிதியாக அகிலஇந்திய மருந்து வணிகர்கள் சம்மேளனம் சேர்க்கப்படவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் திருவாரூர்மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

திருவாரூர்மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருவாரூரில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது,

இப்பொதுக்குழு கூட்டத்தில் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தல், சங்க நிதிநிலைஅறிக்கை ஒப்புதல் பெறுதல் , பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றி என நிகழ்ச்சிகள் நடைபெற்றன,

தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களாக – ஓடிசி – மருந்துகளை வகைப்படுத்தி அறிவிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் வணிகர்களின் பிரதிநிதியாக அகில இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளனம் சேர்க்கப்பட வேண்டும் ,

மருந்துவணிக அனுபவம் அற்றவர்கள் , மருந்து வணிக உரிமம் அற்றவர்கள் மூலம் சில்லறையாகவோ, மொத்தமாகவோ விற்பனை செய்யப்படுவது தவிர்க்கப்படவேண்டும் ,

மின்அஞ்சல் , ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்வதை முற்றிலும் தடுக்கவேண்டும் ,

தமிழ்நாடுஅரசு மருந்து வணிகர்களுக்கு அளிக்கும் மின்சார கட்டணத்தை வீட்டுஉபயோக மின் கட்டண பட்டியலில் சேர்த்து மருந்து வணிகர்களுக்கு மின் சலுகை அளிக்கவேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானங்களாக நிறைவேற்றினர் ,

இந்த பொதுக்குழு கூட்டத்தில் மருந்து வணிகர்கள் சங்கம் திருவாரூர் மாவட்டதலைவர் லட்சுமணன், செயலாளர் ராமச்சந்திரன் , பொருளாளர் நடராஜன் உட்பட மாவட்டத்தில் உள்ள மருந்து வணிகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர் .

 

 

இருதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருதயத்தில் ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இரண்டாவது நாளே மீண்டும் பணிக்கு திரும்பிய பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார் 

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கடந்த 26 ஆம் தேதி பணியில் இருந்த போது நெஞ்சுவலி காரணமாக தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் இருதயத்தில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகன மூலம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதிக்கு இருதயத்தின் அடைப்பை நீக்குவதற்கான ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருதயத்தில் ஸ்டன்ட்கள் பொருத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்று அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ஒரு வார காலம் ஓய்வு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்து காத்திருந்த பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார் தொடர்ந்து பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அனைத்து தரப்பு மக்களின் பிரார்த்தனை காரணமாக நலமுடன் திரும்பிதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

 

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன வித்வான் கோவிந்தராசனாருக்கு முத்தமிழ் விழா: நாகஸ்வரம் மற்றும் மிருதங்க வித்வான்கள் 40 பேர் ஒரே மேடையில் அமர்ந்து இசை அஞ்சலி செலுத்தினர். தருமபுரம் ஆதீனகர்த்தர் பங்கேற்பு:-

மயிலாடுதுறையில் உள்ள பழைமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் ஆதீன நாகசுர வித்துவனாக பணியாற்றியவர் ‘சாகித்ய கர்த்தா” கோவிந்தராசனார். 1933-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி பிறந்த இவர், 1995-ஆம் ஆண்டு அதே தேதியில் தனது 62-வது பிறந்தநாளன்று உயிரிழந்தார். இசையில் புதிய படைப்புகளை உருவாக்கிய பெருமை கொண்ட இவரது 90-வது பிறந்தநாள் விழா, தருமபுரம் ஆதீனக் கல்லூரியில், திருக்கடையூர் தருமையாதீன இசைக்கல்லூரி மற்றும் சென்னை தருமபுரத்தார் அறக்கட்டளை சார்பில் முத்தமிழ் விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. இதில், திருக்கடையூர் தருமையாதீன இசைக்கல்லூரி மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இசைப்பள்ளி மாணவர்கள் 40 பேர் ஒரே மேடையில் அமர்ந்து, கோவிந்தராசனார் படைத்த இசையை நாகஸ்வரம் மற்றும் மிருதங்கம் வாயிலாக வாசித்தனர். மேலும், கோவிந்தராசனார் எழுதிய பாடல்களுக்கு, அவரது மாணவர்களிடம் தற்போது நாட்டியம் பயிலும் மாணவிகள் பரதம் ஆடினர். முன்னதாக, கோவிந்தராசனார் குறித்து கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இவ்வாறு, முத்தமிழ் விழாவாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு, கோவிந்தராசனாரின் உருவப்படத்தை திறந்து வைத்து, சிறந்த இசைக்கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டி பேசினார். இதில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இசைக்கலைஞர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

இன்றைய முக்கிய செய்திகள் | புதுவையின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (01.07.2024)

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (01.07.2024) – 02