in

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (02.07.2024)


Watch – YouTube Click

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (02.07.2024)

 

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி செஞ்சி முக்கிய வீதிகள் வழியாக கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் அண்ணமங்கலம் சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணிதிட்டம் மாணவ மாணவிகள் சார்பில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
கல்லூரி தாளாளரும் அரசு வழக்கறிஞருமான கிருஷ்ணன் கல்லூரி செயலாளர் வழக்கறிஞர் பரமசிவம் தலைமையில் கல்லூரி முதல்வர் முனைவர் ஹரிகுமார் வரவேற்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செஞ்சி வட்டாட்சியர் ஏழுமலை,செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார்மஸ்தான்ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மேல்மலையனூர் திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன்,குற்றவியல் அரசு வழக்கறிஞர் சக்திவேல்,செஞ்சி சேம்பர் ஆஃப் பார்மர்ஸ் செயலாளர் சுரேஷ் ஆகியோர்கள் போதை விழிப்புணர்வு குறித்து சிறப்புரை ஆற்றினார்கள். நாட்டு நலப்பணிதிட்ட ஒருங்கிணைப்பாளர் யோகானந்த் நன்றி கூறினார்.

செஞ்சி பேரூராட்சி அலுவலகத்திலிருந்து, காந்தி பஜார் செஞ்சி பேருந்து நிலையம் வழியாக திருவண்ணாமலை சாலை,தேசூர் பாட்டை சாலை தனியார் திருமண மண்டபம் வரை நடைபெற்றது.

இந்தப் பேரணியில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பல்வேறு வாசகங்களை அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு செய்தபடி செஞ்சி காந்தி பஜார், விழுப்புரம் சாலை திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

போதை விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் செஞ்சி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி செஞ்சி போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பாண்ட ராஜ்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

மயிலாடுதுறை மாவட்டம் வீரசோழன் ஆற்றில் பட்டப் பகலில் மூட்டையில் கட்டி நூதன முறையில் மணல் திருட்டு கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை மழை காலங்களில் கரை உடையும் அபாயம் :-

மயிலாடுதுறை மாவட்டம் காவிரி ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகள் கடலில் கலக்கும் முக்கியமான கடைமடை பகுதியாகும். காவிரி கொள்ளிடம் வீரசோழன் மஞ்சள் ஆறு மகிமலையாறு கடலாழி ஆறு பழவாறு உள்ளிட்ட பல ஆறுகள் மயிலாடுதுறை மாவட்டத்தை வளமான டெல்டா பகுதியாக மாற்றுகின்றன தற்போது காவிரியில் தண்ணீர் வராத காரணத்தால் ஆறுகள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன விவசாய தொழில் மேற்கொள்ள வேண்டிய கிராமத்தினர் மணலை திருடி பிழைப்பு நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதில் உச்ச கட்டமாக குத்தாலம் தாலுக்கா கரைகண்டம், மல்லார் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரத்திலேயே கும்பல் கும்பலாக சேர்ந்து ஆறுகளில் மணலை தோண்டி மூட்டைகளில் கட்டி அவற்றைக் கரைகளுக்கு கொண்டு வந்து டிராக்டர் மினி வேன் ஆகிய வாகனங்களில் கடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பல கிலோமீட்டர் தூரத்திற்கு ஆறுகளில் பெரும் பள்ளங்கள் காணப்படுகின்றன. ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் பொழுதும் பெருமழை காலத்திலும் வெள்ளம் ஏற்பட்டால் ஆறு பலம் இழந்து கரைகளில் உடைப்பு ஏற்பட்டு பாசனத்திற்கு உண்டான தண்ணீர் வெளியேறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அபாயகரமான பள்ளங்களில் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் சிக்கி உயிரிழக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இரவு பகல் பாராமல் தொடர்ந்து ஆற்றில் மணல் திருடுவதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றும் திமுகவினர் பின்னணியில் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

 

மேட்டூர் அணை திறப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நாகை மாவட்ட விவசாயிகள் சம்பா உழவுப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்: 50%க்கு மாற்றாக முழு உழவு மானியம் வழங்கவும், ஏற்கனவே வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை:

பேட்டி: கமல்ராம் தமிழக காவிரி விவசாய சங்கம் நாகை மாவட்ட செயலாளர்

இந்தாண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காத நிலையில் ஆற்றுப் பாசனத்தை பெருமளவில் நம்பி இருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பொய்த்துப் போனது. இருப்பினும் சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீரையானது அரசு பெற்று தரும் என்ற நம்பிக்கையோடு
சம்பா உழவுப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விளைநிலத்தைக் கொண்ட நாகை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் டிராக்டர்கள் மூலம் உழவுப் பணிகள் மற்றும் வயல்களை சீரமைத்தல், பாசன வாய்க்கால்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக கீழ்வேளூர், தேவூர், திருக்குவளை, சாட்டியக்குடி, முப்பத்தி கோட்டகம், இறையான்குடி, பாலக்குறிச்சி, செம்பியன்மகாதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடிக்கான உழவு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள முடியாத நிலையில் ஏற்கனவே கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற விவசாய கடனை தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்டத்திற்கு தற்போது அறிவித்த குறுவை தொகுப்பு திட்டம் நாகை மாவட்ட விவசாயிகளுக்கு பயனளிக்காத நிலையில், விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைக்கவும் உழவு மானியம் உள்ளிட்ட சம்பா சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். மேலும் 50 சதவீதத்தில் வழங்கப்படும் டிராக்டர் மானியத்தை 0 சதவீதமாக(முழு மானியமாக) மாற்றி வழங்க வேண்டும் எனவும் நாகை மாவட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

நாகை அருகே சிதிலமடைந்த சாலையை சீரமைக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சேரும் சகதியுமாக சாலையில் நாற்றுநட்டு கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஆந்தக்குடி ஊராட்சி தெற்கு தெருவில் சுமார் 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . அப்பகுதியின் சாலை கடந்த 6 ஆண்டுகளாக சீர்மைக்காத காரணத்தால் பொதுமக்கள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் கிராவல் ஜல்லி கலந்து சாலை போடப்பட்டது. ஆனால் சாலை பணி முழுவதும் முடிக்காமல் பணிகள் நிறுத்தப்பட்ட காரணத்தால் பொதுமக்கள் பயன்படுத்தும் மாற்று சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்களும், பெண்களும், பொதுமக்களும் சேற்றில் வழுக்கி விழுந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுவது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், நேற்று முன்தினம் பெய்த மழையால் சாலையில் சேறும், சகதியுமாக உள்ளதால் ஆத்திரமடைந்த பெண்கள் சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லாத காரணத்தால் சேரும் சகதியுமாக உள்ள சாலையில் அவதியடைந்து வருவதாக கூறியுள்ள மக்கள் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

இன்றைய முக்கிய செய்திகள் | புதுவையின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (02.07.2024)

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (02.07.2024) – 02